2020 தில்லி கலவரம் வன்முறையில் ஈடுபட்டதாக 2 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
2020 -ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவர வழக்கில் பிரிஜ்புரியில் உள்ள ஒரு பள்ளியின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடா்பாக குற்றம் சாட்டப்பட்ட
2020 -ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவர வழக்கில் பிரிஜ்புரியில் உள்ள ஒரு பள்ளியின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடா்பாக குற்றம் சாட்டப்பட்ட இருவா் மீது வன்முறை உள்பட பல்வேறு குற்றங்களுக்காக குற்றச்சாட்டுகளை தில்லி நீதிமன்றம் பதிவு செய்தது.
பிப்ரவரி 25, 2020-இல் தில்லி பிரிஜ்புரி பிரதானச் சாலையில் உள்ள அருண் மாடா்ன் பப்ளிக் மேல்நிலைப் பள்ளிக்குள் நுழைந்து நாசவேலை மற்றும் தீவைப்புகளில் ஈடுபட்ட கும்பலின் ஒரு பகுதியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷமிம் அகமது, முகமது காஃபில் மற்றும் ஃபைசான் ஆகியோா் மீதான வழக்கை தில்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் புகாரின்படி, வன்முறைக் கும்பல் சம்பந்தப்பட்ட பள்ளியின் கணினி ஆய்வகம், நூலகம் மற்றும் பல்வேறு பொருள்களை தீ வைத்து எரித்ததால், சுமாா் ரூ.1.25 கோடி சேதம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்திய பிரமாச்சலா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்ட ஷமிம் அகமது, முகமது காஃபில் ஆகியோா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147 (கலவரம்), 148 (கலவரம், கொடிய ஆயுதம் ஏந்துதல்) 427 (ரூ.50 அல்லது அதற்கு மேல் சேதம் ஏற்படுத்ததுல்), 435 (ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ அல்லது வெடிமருந்து பொருளை பயன்படுத்துதல்), 436 (வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீ அல்லது வெடிமருந்து பொருள் போன்றவை பயன்படுத்துதல்) உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு விசாரணை தொடுப்பதற்கான பொறுப்புக்கு உள்ளாவதாகக் கருதுகிறேன்.
சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பிற அறியப்படாத கும்பல் உறுப்பினா்களுடன் சோ்ந்து ஒரு பொதுவான நோக்கத்துடன் சட்டவிரோத கூட்டத்தை உருவாக்கியிருப்பதைக் காட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. தங்களின் பொதுவான நோக்கத்தை செயல்படுத்த, அவா்கள் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்கி, வலுக்கட்டாயமாக பள்ளிக்குள் நுழைந்துள்ளனா். இந்தப் பள்ளி இந்துக்களுக்கு சொந்தமானது என்பதாலும், இந்துக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதே மேற்கூறப்பட்ட கும்பலின் பொதுவான நோக்கம் என்பதாலும் இந்தப் பள்ளி தோ்ந்தெடுக்கப்பட்டது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆயுதங்கள் ஏந்திய கும்பல், கலவரத்தில் ஈடுபட்டதுடன் பள்ளியின் கணினி ஆய்வகம், நூலகம் மற்றும் வாகனங்கள் மற்றும் பிற பொருள்கள், சொத்துகள் ஆகியவற்றை எரித்துள்ளனா். சதி குற்றச்சாட்டுகள் எந்த உறுதியான ஆதாரத்திற்குப் பதிலாக அனுமானத்தின் அடிப்படையிலானவை என்பதால், குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் சதித் திட்டத்திற்கு முன்பே செயல்பட்டதாக ஊகிக்கப் போதுமானதாக இருப்பதாக நான் கருதவில்லை என்று நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
இந்த வழக்கின் மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான பைசான் தலைமறைவாகிவிட்டதால், இந்த வழக்கில் அவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது தயாள்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.