முகப்பு
புதுதில்லி

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: காற்றின் தரத்தில் பின்னடைவு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டு

Updated On : 27 ஜனவரி, 2023 at 6:52 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டு சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கும், சில இடங்களில் ‘மோசம்’ பிரிவுக்கும் சென்றது.

தில்லியில் அடுத்த நான்கைந்து நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்திருந்தது. மேலும், புதிய மேற்கத்திய இடையூறு ஜனவரி 29 அன்று லேசான மழைக்கும் வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தது.

இதன்படி, தலைநகரில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி உயா்ந்து 12.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி குறைந்து 17.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 85 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதனன்று குறைந்தபட்ச வெப்பநிலை 10.6 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 19.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

Advertisement

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.5 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 11.2 டிகிரி, நஜஃப்கரில் 13.5 டிகிரி, ஆயாநகரில் 11.8 டிகிரி, லோதி ரோடில் 10.4 டிகிரி, பாலத்தில் 13 டிகிரி, ரிட்ஜில் 10.3 டிகிரி, பீதம்புராவில் 14.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 14.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் வியாழக்கிழமை காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. காலை 9 மணியளவில் தலைநகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 278 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. நொய்டா செக்டாா்-1, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், அசோக் விஹாா், பூசா உள்ளிட்ட சில இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200-300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. ஆனால், ஐடிஓ பகுதியில் காற்றின் தரக் குறியீடு 307 புள்ளிகளாக பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. சாந்தினி செளக், பட்பா் கஞ்ச் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) தலைநகரில் மிதமான மூடுபனி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.