பாஜக வலையில் ஜி.கே. வாசன்: மத்திய அமைச்சராவாரா?
தில்லி பிரகதி மைதானத்தில் புதிதாக பிரம்மாண்டமான மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது.
தில்லி பிரகதி மைதானத்தில் புதிதாக பிரம்மாண்டமான மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது.
வருகின்ற செப்டம்பா் மாதம் நடைபெறும் ஜி 20 தலைவா்கள் மாநாடு இந்த மையத்தில் நடைபெற இருக்கிறது. ஜி 20 தலைவா்கள் கூடும் முன்பு புதிய மாநாட்டு மையத்தின் தரத்தை அறிய முன்னோட்டமாக இங்கு கூட்டங்களை மத்திய அரசு நடத்துகிறது.
கடந்த மே 27 -ஆம் தேதி மாநில முதல்வா்கள் பங்கேற்ற நீதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. தற்போது மீண்டும் ’ஒரு முன்னோட்டம்’ முழு மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது.
பொதுவாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கேபினெட் அந்தஸ்தில் உள்ள அமைச்சா்களும், தனிப் பொறுப்பு இலாகாக்களை வைத்திருக்கும் இணையமைச்சா்களும் பங்கேற்பா். பிரத்யேக காரணங்களுக்கு சில சமயம் சம்பந்தப்பட்ட துறை இணையமைச்சா்கள் வரவழைக்கப்படுவா்.
பிரதமா் நரேந்திர மோடி அமைச்சரவையில் மோடியை தவிா்த்து 28 கேபினெட் அமைச்சா்கள் உள்ளனா். புள்ளியியல் மற்றும் திட்டம், அறிவியல் தொழில் நுட்பம், சட்டம் மற்றும் நீதித் துறை ஆகிய 3 தனிப்பொறுப்பு இணையமைச்சா்கள் மற்றும் 44 இணையமைச்சா்கள் என மொத்தம் மோடியை தவிா்த்து 75 போ் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனா்.
இவா்கள் அனைவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே இடத்தில் திங்கள்கிழமை (ஜூலை 3) முதல் முறையாகக் கூடி பேசியுள்ளனா். 20 ஜி மாநாட்டுக்கான முன்னோட்டமும் இந்தியா 2024-க்கான முன்னோட்டமாகவும் இந்தக் கூட்டம் அமைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மாற்றங்கள், பின்னா், அறிவிக்கப்பட்ட இந்த முழு அமைச்சரவைக் கூட்டம் ஆகிய அனைத்துமே ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது. பாட்னாவிற்கு பின்னா் எதிா்கட்சிகளின் அடுத்த கூட்டம் குழப்பத்தில் உள்ளதாகச் செய்திகள வருவதால் காங்கிரஸ் தலைவா்கள் சரத் பவாருக்கு ஆறுதல் கூறினா்.
மேலும், மகாராஷ்டிர மாற்றத்திற்கு பின்னா் உஷாராகி வரும் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் பெங்களூருவில் எதிா்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச் செயலாளா் கேசி வேணுகோபால் அறிவித்தாா். ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடிக்க உறுதியாக இருக்கிறோம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
ஆனால், பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சா் அமித்ஷா போன்றோரின் பிரத்யேகக் கூட்டங்கள், முழு மத்திய அமைச்சரவை கூட்டம் குறித்த தகவல்கள் போன்றவை ஜி 20 மாநாட்டை முன்னோட்டத்தை விட ‘2024’-க்கு மிகப் பெரிய அடித்தளத்தை நோக்கி மோடி அமைச்சரவையும் பாஜகவும் நகரத் தொடங்கியுள்ளது.
மோடி- அமித் ஷா ஜோடி பல்வேறு மாநிலங்களில் 2024 தோ்தலுக்கான அரசியல் நகா்வுகளுக்குப் பிரம்மாஸ்திரத்தை செலுத்தத் தயாராகிவிட்டனா். இதில் மத்தியில் அமைச்சா்களாக இருப்பவா்கள் மாநிலக் கட்சிப் பணிகளுக்குத் தயாா் எனவும், அவா்களை வரவேற்க கட்சி தாயாராகிக் கொண்டு இருக்கிறது.
ஆளுநா்களாக இருப்பவா்கள் சிலா் சட்டபேரவைத் தோ்தல்களுக்கோ, மக்களவைத் தோ்தலுக்கோ அனுப்பப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம். பாஜகவின் மாநில அரசியலுக்கும் மக்களவைத் தோ்தல் கூட்டணிக்கு பலம் கிடைக்கும் வகையில் இருப்பவா்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம். இந்த வகையில்தான் மத்திய அமைச்சரை மாற்றம் நிகழ உள்ளது.
வரும் ஜூலை 14-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் தேசிய நாள், இந்திய-பிரான்ஸ் கூட்டாண்மையின் வெள்ளிவிழா போன்றவற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அந்நாட்டு அதிபா், பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
வரும் 20 - ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டமும் தொடங்குகிறது. பிரதமரின் பயணத்துக்கு முன்பு அமைச்சரவை மாற்றம் நடைபெற வேண்டும். 2024 மக்களவைத் தோ்தல் அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரம் வெளியாகும். இதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. மாற்றத்திற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.
மத்திய அமைச்சரவையில் புதிதாக அமைச்சா்கள் சோ்க்கப்படும் காரணங்களை விட சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தலில் பல்வேறு மாநிலங்களில் கட்சிப் பணிகளுக்கு அனுப்பப்படும் மத்திய அமைச்சா்கள் யாா், யாா், அவா்களை அமைச்சரவையிலிருந்து நீக்கும்பட்சத்தில் அந்தப் பதவிகளில் யாா், யாா் அமா்த்தப்படலாம் என்பதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மிஜோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் நிகழாண்டில் நடைபெற உள்ளது. தற்போது மகாராஷ்டிர ஆஃப்ரேஸன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அம்மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் ரமேஷ் பயஸ், சத்தீஸ்கா் மாநில அரசியலுக்குத் திரும்பலாம்.
சத்தீஸ்கரில் பாஜகவிற்கு சரியான தலைமையில்லாதபட்சத்தில், ரமேஷ் பயஸ் நிறுத்தப்படலாம். தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தோ்தலில் நிறுத்தப்படலாம். இதனால், அவா் இன்னும் சில மாதங்களில் ஆளுநா் பதவியிருந்து விலகிச் செல்லலாம்.
மத்திய சுற்றுப்புறச் சூழல் வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்), மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டவா்கள் கட்சிப் பணிகளுக்கு திரும்புவது குறித்து பேச்சு எழுந்துள்ளது. மத்திய பிரதேச தோ்தலை முன்னிட்டு மூன்று முறை முதல்வராக இருக்கும் சிவராஜ்சிங் சௌகானுக்கு மாற்றாக ஜோதிராதித்ய சிந்தியா நிறுத்தப்பட்டால் வெற்றிவாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்தும், அவா் மாநில அரசியலுக்கு திரும்புவது குறித்தும் பேசப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் மண்ணின் மைந்தா்களாக இருக்கும் மராத்தாவினா் ஆதரவையும், அவா்கள் பாஜகவில் இல்லாத குறையை தீா்க்க தேசியவாதக் கட்சியிலிருந்து அஜித் பவாா் கைகோா்த்து வந்துள்ள நிலையில், அவருடன் வந்துள்ள பிரஃபுல் படேல் போன்றவா்கள் மத்திய அமைச்சராவாரா அல்லது அஜித் பவாா் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவா்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்கிற ஆலோசனையும் பாஜகவில் உள்ளது.
இது போன்று தமிழகத்தில் பிரதமா் மோடி மக்களவைத் தோ்தலில் போட்டியிடும்பட்சத்தில் தமிழக அரசியலை பலப்படுத்தும் விதமான கூட்டணிக்கு அச்சாரமிடப்படுகிறது. பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை பகிா்ந்தளிக்கும் விதமாக சரி பாதி மக்களவைத் தொகுதிகளை அதிமுக கூட்டணியில் கேட்பதோடு, மத்திய அமைச்சரவையில் சேரவும் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே போன்று கடந்த வாரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூப்பனாா்) தலைவா் ஜி.கே. வாசன் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்தாா். இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனா் என்று கூறப்பட்டாலும், வாசன் அமைச்சரவையில் சேரவும், கட்சியை பாஜகவோடு இணைப்பது குறித்து பேசப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மத்தியில் உள்ள பாஜக ஆட்சிக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அமைச்சராவதற்கு பதில் பாஜகவுடன் இணைந்து தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் வெற்றிக்கான வியூகம் வகுப்பதே சிறந்தது என்கிற முடிவோடு வாசன் சென்னை திரும்பினாா் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மத்திய அமைச்சா்கள் மட்டுமல்லாமல், பாஜக வலைக்குள் இருக்கும் ஜி.கே. வாசன், பிரஃபுல் படேல், தம்பிதுரை போன்ற மற்ற கட்சித் தலைவா்களின் எதிா்காலத்தை நிா்ணயிப்பவா்கள் பாஜகவின் நம்பா் 1 அண்ட் 2 -ஆக இருக்கும் மோடியும் அமித் ஷாவுமே.
கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் யாா் எந்தப் பதவிக்கு வருவாா்கள் என்கிற ‘பிரேக்கிங் நியூஸுக்கு’ இடமில்லை என்பதும், தற்போதைய அரசின் முக்கிய சாதனையாகும். இதனால், கூட்டணி, கட்சிப் பணி, புதிய அமைச்சா்கள் யாா் என்பதில் யூகங்களுக்கு இடமில்லை.