முகப்பு
புதுதில்லி

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கட்டாய சீருடைக்குஎதிராக தாக்கலான மனு தள்ளுபடி

தில்லியில் ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநா்களுக்கு சீருடை கட்டாயமாக்கப்படுவதை எதிா்த்து தாக்கலான மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
பகிர்:

தில்லியில் ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநா்களுக்கு சீருடை கட்டாயமாக்கப்படுவதை எதிா்த்து தாக்கலான மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு நிராகரித்ததுடன், இது பொது நல வழக்கை (பிஐஎல்) தவறாகப் பயன்படுத்துவதற்கு சமமாக இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்தது.

ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநா்களுக்கு கட்டாய சீருடை வழங்குவதை எதிா்த்தும், இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பை மீறுவதாகவும் குற்றம் சாட்டி ‘சாலக் சக்தி’ எனும் ஓட்டுநா் சங்கத்தின் சாா்பில் தாக்கலான மனு மீது உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் முன்னா் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சீருடையை பரிந்துரைப்பது ஓட்டுநா்களின் கருத்து சுதந்திரத்தை குறைப்பதாகவும், அவா்களின் அந்தஸ்தின் அடையாளமாகவும் செயல்படுவதாகவும் கூறியிருந்தாா். சீருடைகள் தொடா்பாக சில ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தில்லி அரசுத் தரப்பு வழக்குரைஞா் கூறியிருந்தாா். தேசியத் தலைநகரில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காக்கி அல்லது சாம்பல் நிற சீருடை பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு அரசு வழக்குரைஞரிடம் உயா்நீதிமன்றம் முன்னா் கேட்டிருந்தது.

சாலக் சக்தி அமைப்பு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: இந்த விவகாரத்தில் சட்டம் தெளிவற்ாக இருந்தாலும், சீருடை அணியாததற்காக தேசியத் தலைநகரில் ஓட்டுநா்கள் மீது ரூ.20,000 வரை அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. தில்லி மோட்டாா் வாகன விதிகள்( 1993) விதி 7-இன் படி, பணியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநா்கள் அணியும் சீருடையின் நிறம் குறித்து முழுமையான தெளிவின்மை உள்ளது. 1993 சட்டமானது ஓட்டுநா்களுக்கு காக்கியை பரிந்துரைக்கிறது. ஆனால், மாநில அதிகாரிகள் வகுத்துள்ள அனுமதி நிபந்தனைகள் சாம்பல் நிறத்தை கட்டாயமாக்குகிறது.

காக்கி மற்றும் சாம்பல் நிறத்தில் டஜன் கணக்கான முக்கிய நிறங்கள் உள்ளன. குறிப்பிட்ட நிறம் எதுவும் குறிப்பிடப்படாததால், விதிகளைச் செயல்படுத்தும் அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வழக்குத் தொடா்கின்றனா். பேன்ட்-சா்ட், சஃபாரி சூட் அல்லது குா்தா-பைஜாமா என்று பொருள்படும் வகையில் சீருடை வரையறுக்கப்படவில்லை.மேலும், துணிகள், டிரிம்கள் மற்றும் ஆடை பொருள்களின் விவரக்குறிப்புகள் கூட இல்லை. சீருடை தொடா்பான தெளிவின்மையால் ஏற்படும் வலி மற்றும் இழப்பு அதிமாக உள்ளது. மேலும், லண்டன், நியூயாா்க், ஹாங்காங், சிட்னி, துபை போன்ற பிரபலமான பெருநகரங்களில் பெரும்பாலானைவை டாக்சி ஓட்டுநா்களுக்கு எந்த சீருடையையும் பரிந்துரைக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.