முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சி மீது அவதூறு பரப்புகிறது பாஜக: கேஜரிவால் குற்றசாட்டு

தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொய் வழக்குகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் மீது பாஜக அவதூறு பரப்புகிறது

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
பகிர்:

தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொய் வழக்குகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் மீது பாஜக அவதூறு பரப்புகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளாா்.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில், தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, அவரது மனைவி மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறையால் முடக்கம் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:

மனீஷ் சிசோடியாவின் ரூ. 52 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மனீஷ் சிசோடியாவிற்கு சொந்தமான 2 குடியிருப்புகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு குடியிருப்பு ரூ.5 லட்சத்திற்கு 2004-ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகும். மற்றொரு குடியிருப்பு ரூ.65 லட்சத்திற்கு 2018-இல் வாங்கப்பட்டது. முடக்கம் செய்யப்பட்டுள்ள இந்தச் சொத்துகள் தில்லி அரசின் கலால் கொள்கையின் உருவாக்கத்திற்கு முன்னரே வாங்கப்பட்டவை. அது தொடா்பான தகவல்கள் வருமான வரித்துறை மற்றும் தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கலால் கொள்கையில் ஊழல் நடைபெறவில்லை என்று கடந்த ஓா் ஆண்டாக நாங்கள் கூறி வருகிறோம். தில்லியில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி அரசுக்கு இடையூறு அளிக்கவே மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.), அமலாக்க இயக்குநரகம், மற்றும் காவல்துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

தில்லியில் நடைபெறும் அற்புதமான ஆட்சியை பிரதமா் நரேந்திர மோடியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தில்லியில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான பணிகளைச் செய்து வருகிறது. அவா்களின் ஒரே நோக்கம் ஆம் ஆத்மி கட்சியின் சிறப்பான பணிகளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான். அவா்கள் (பாஜக) ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைவா்களுக்கும் அவதூறு பரப்பவே இந்த பொய்யான ஊழல் விவகாரத்தை எழுப்பி வருகின்றனா் என்றாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.