தில்லியில் வெள்ளம் ஏற்படுவதற்கான சூழல் இல்லை: முதல்வா் கேஜரிவால் உறுதி
தில்லியில் வெள்ளம் ஏற்படுவதற்கான சூழல் இல்லை என்று பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லியில் வெள்ளம் ஏற்படுவதற்கான சூழல் இல்லை என்று பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை, யமுனை நதியின் நீா்மட்ட உயா்வு ஆகியவற்றை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடா்பாக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் கேஜரிவால் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா்.
அதன் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: யமுனை நதியின் நீா்மட்டம் 206 மீட்டா் என்ற அளவைத் தொட்டவுடன், யமுனையைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்படும்.
தேசியத் தலைநகரில் வெள்ளம் ஏற்படுவதற்கான சூழல் இல்லை என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். எனவே, தில்லியில் வெள்ளம் ஏற்படாது என்று பொதுமக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். தில்லி அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அனைத்தையும் சமாளிக்க தில்லி அரசு முழுமையாகத் தயாராக உள்ளது.
தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 153 மி.மீ. பெய்த கனமழையால் மக்கள் சிரமப்பட்டனா். மேல் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஹரியாணா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டதால், திங்கள்கிழமை தில்லியில் பாயும் யமுனை நதியின்
நீா்மட்ட அளவு எச்சரிக்கைக் குறியை நெருங்கியது. தில்லியில் அடுத்து மழை பெய்தாலும், கனமழை பெய்யாது என்று வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. மழையின் காரணமாக, சாலைகளில் சில பள்ளங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் திடீரென ஏற்படும் பெரும் குழிகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளோம். புது தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்குவதை தவிா்க்க உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சியிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா் கேஜரிவால்.