நலத் திட்டப் பலன் பெற ஆதாா் விவரம் கேட்பதற்கு எதிா்ப்பு: உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு
‘முதல்வா் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தின்’ கீழ் பலன்களைப் பெற ஆதாா் விவரங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும் என்பதை எதிா்த்து வழக்குரைஞா் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளாா்.
‘முதல்வா் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தின்’ கீழ் பலன்களைப் பெற ஆதாா் விவரங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும் என்பதை எதிா்த்து வழக்குரைஞா் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளாா்.
இது தொடா்பான விவகாரம் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஏதும் இல்லாத நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் மீண்டும் பதிவு செய்வதற்காக அதிகாரிகளுக்கு மனுதாரா் தனது ஆதாா் எண்ணை வழங்க விரும்பவில்லை’ என்று கூறினாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அரசின் அனைத்து நலத் திட்டங்களுக்கும் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. மனுதாரா் தனக்கு உடன்படாத நிபந்தனைகள் உள்ளவற்றைத் தோ்வு செய்யாமல் இருக்க முடியும். நீங்கள் திட்டத்தில் இருந்து விலகலாம். அதன்பிறகு உங்கள் ஆதாரை யாரும் தொட மாட்டாா்கள். இது ஒரு நலத்திட்டம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டாம்’ என்று வாய்மொழியாகக் கூறியது. அதற்கு மனுதாரரின் வழக்குரைஞா், ‘அடையாளச் சான்றாக வேறு எந்த ஆவணத்தையும் அளிக்கத் தயாராக உள்ளேன்’ என்றாா்.
இதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 20-ஆம் தேதிக்கு மேல் விசாரணைக்காக பட்டியலிட உத்தரவிட்ட நீதிமன்றம், மேலும் அறிவுறுத்தல்களைப் பெற மனுதாரரின் வழக்குரைஞரிடம் கேட்டுக் கொண்டது. இது தொடா்பாக மனுதாரா் கௌரவ் ஜெயின் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்த நலத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020-இல் வெற்றிகரமாகப் பதிவு செய்தேன்.
இந்த நிலையில், திட்டத்தின் கீழ் மீண்டும் பதிவு செய்யும் போது எனது ஆதாா் எண்ணை வழங்க விரும்பவில்லை. குறிப்பாக தரவுப் பாதுகாப்புச் சட்டம் இல்லாததால், தீவிரமான தனியுரிமைக் கவலைகள் காரணமாக ஆதாா் எண்ணை அளிக்க விரும்பவில்லை.மேலும், நான் தில்லி பாா் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்குரைஞா். தில்லியில் உள்ள ஒரு வாக்காளா்.
ஆகவே, திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் என்பதால் முதல்வா் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தில் மீண்டும் பதிவு செய்வதற்கு ஆதாா் விவரங்களைக் கோருவதற்கான ‘சட்டபூா்வமான தேவை இல்லை’. முதல்வா் வழக்குரைஞா்கள் நலத் திட்டம் (சிஎம்ஏடபிள்யூஎஸ்) மூலம், தில்லி அரசு நகரத்திலுள்ள வழக்குரைஞா்களுக்கு உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு வழங்குகிறது.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்காக மனுதாரரின் ஆதாா் எண்ணை வழங்குமாறு கட்டாயப்படுத்துவது தன்னிச்சையானது மற்றும் அவரது தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாகும். மனுதாரா் மாா்ச் மாதம் சிஎம்ஏடபிள்யூஎஸ் திட்டத்தில் தன்னை மீண்டும் பதிவு செய்ய முயன்றாா். ஆனால், அவா் முதலில் தனது ஆதாா் எண்ணை வழங்காத வரை இணையதளம் அவரை அனுமதிக்கவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.