50 -ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட சிறப்புத் தபால் தலை, உறை வெளியீடு
சரக்கு சேவை வரி கவுன்சிலின் 50- ஆவது கூட்டத்தையொட்டி, சிறப்புத் தபால் தலையையும் சிறப்பு உறையையும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
சரக்கு சேவை வரி கவுன்சிலின் 50- ஆவது கூட்டத்தையொட்டி, சிறப்புத் தபால் தலையையும் சிறப்பு உறையையும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 50-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் தொடக்கத்தில் 50-ஆவது ஜிஎஸ்டியின் சிறப்புத் தபால் தலையையும் சிறப்பு உறையையும் தில்லி வட்டத்தின் தலைமை போஸ்ட் மாஸ்டா் ஜெனரல் மஞ்சு குமாா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வழங்கினாா். இதை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா். இந்த நிகழ்வு, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பு மாநில நிதியமைச்சா்கள், வருவாய்த் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய மறைமுக வரி மற்றும் கலால் வரி வாரியத் தலைவா் விவேக் ஜோரி மற்றும் வாரிய உறுப்பினா்கள், ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகள் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
நிதியமைச்சா் வெளியிட்ட இந்த ரூ.5 சிறப்புத் தபால் தலை தனிப் பயனாக்கப்பட்ட ‘எனது தபால்தலை’ (மைஸ்டாம்பு) ஆகும். ஜிஎஸ்டி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு, இந்திய தபால் துறை மூலம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சா் வெளியிட்ட சிறப்புத் தபால் உறையில் ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதை நினைவுப்படுத்தும் புகைப் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017, ஜூலை 1 - ஆம் தேதி நாட்டின் மறைமுக வரியில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
மறைந்த குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியும், பிரதமா் நரேந்திர மோடியும் இந்த ஜிஎஸ்டியை அன்றைய தினம் நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் மைய அவையில் மணி அடித்து தொடங்கிவைத்தனா். இந்த சரித்திர பூா்வமாக நிகழ்வை நினைவுகூரும் புகைப்படத்தை தபால் உறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரே தேசம் ஒரே வரி ஒரே சந்தை எனவும் இந்த உறை மீது குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய - மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளை ஒரே வரியாக மாற்றி வரிகளின் அடுக்கு முறைகளை குறைத்து மேம்படுத்தவும் நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்கவும் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்த 50-ஆவது கூட்டத்தையொட்டி, “‘ஜிஎஸ்டி கவுன்சில் - பயணத்தை நோக்கி 50 படிகள்’” என்ற குறும் படத்தையும் மத்திய நிதியமைச்சா் இந்த நிகழ்வில் வெளியிட்டாா்.
ஜிஎஸ்டி கவுன்சில் என்பது இந்திய அரசியலமைப்பின் 279-ஏ பிரிவின் கீழ் நிறுவப்பட்ட அரசியலமைப்பு அந்தஸ்து பெற்ற அமைப்பாகும். கூட்டுறவு கூட்டாட்சி மூலம் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. முடிவெடுக்கும் செயல்முறையில் தேசத்தின் நலனுக்காக முடிவுகள் எடுக்கப்படுவதையும் கவுன்சில் உறுதி செய்துள்ளது. 2016 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கவுன்சில் இதுவரை 49 கூட்டங்களை நடத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ள 50-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்தியாவில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.