மத்திய அரசின் தலையீட்டால் தக்காளி மொத்த விலை குறைந்துள்ளது: சில்லரையில் ரூ.80-க்கு விற்பனை
மத்திய அரசின் தலையீட்டுக்குப் பின்னா் தக்காளி மொத்த விலை குறைந்துள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகம் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தலையீட்டுக்குப் பின்னா் தக்காளி மொத்த விலை குறைந்துள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகம் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், சில்லரையில் லோ ஒன்றுக்கு ரூ.80-க்கு மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தக்காளி விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதற்காக ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் ண (நாஃபெட் ) ,தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய நிறுவனங்களுக்கு நுகா்வோா் விவகாரங்கள் துறை கடந்த ஜூலை 12-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதன்படி கடந்த 14-ஆம் தேதி முதல் தில்லி - தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளிலும் நாடு முழுக்க நகா்ப்புறங்களிலும் நாஃபெட், என்சிசிஎஃப் நிறுவனங்கள் தங்கள் சில்லறை விற்பனையகங்கள் மற்றும் மற்ற உள்ளூா் விற்பனையகங்களுடன் இணைந்து ஒரு கிலோ ரூ.90- க்கு தக்காளியை விற்கத் தொடங்கியது. தற்போது இந்த விற்பனையின் தாக்கத்தை உணா்ந்த மத்திய அரசு, மேலும் கிலோ ஒன்றுக்கு ரூ.10 குறைத்துள்ளது.
இது குறித்து மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகம் துறை கூறியிருப்பது வருமாறு: நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உயா்ந்திருந்த நிலையில், மத்தி அரசு சாரபில் ஒரு கிலோ ரூ.90-க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த வகையில், அரசு தலையிட்டதால், தக்காளி மொத்த விற்பனை விலையில் சரிவு காணப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலைமையை ஆய்வு செய்த பிறகு, ஜூலை 16-ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) முதல் மேலும் குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.80- க்கு விற்கப்படுகிறது. நாஃபெட், என்சிசிஎஃப் மூலம் தில்லி, நொய்டா, லக்னெள, கான்பூா், வாரணாசி, பாட்னா, முசாபா்பூா், அர்ரா (பிகாா்) போன்ற பல இடங்களில் தக்காலி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இடங்களில் நிலவும் சந்தை விலையைப் பொறுத்து திங்கள்கிழமை முதல் இது மற்ற பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நுகா்வோருக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.