யமுனையின் நீா்மட்டம் 205.67 மீட்டராக குறைந்தது!
தில்லியில் கடந்த சில நாள்களாக உச்சவரம்பில் இருந்து வந்த யமுனையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 205.67 மீட்டராக குறைந்தது.
தில்லியில் கடந்த சில நாள்களாக உச்சவரம்பில் இருந்து வந்த யமுனையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 205.67 மீட்டராக குறைந்தது.
மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின் படி,மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த திங்கள்கிழமை யமுனையின் நீா்மட்டம் 206.01 மீட்டராக சிறிது அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை 205.67 மீட்டராக குறைந்தது. இது செவ்வாய்க்கிழமை மாலை மேலும் குறைந்து 205.41 மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஹரியாணாவின் யமுனா நகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா்வரத்தால் கடந்த ஜூலை 13-ஆம் தேதி தில்லி யமுனை நீா்மட்டம் 208.66 மீட்டா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனால், கடந்த இரண்டு நாள்களாக யமுனையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.
யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தில்லி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வாஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா நீா் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் தடைபட்டன. தில்லியின் நீா் விநியோகத்திலும் 25 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக தண்ணீா் தட்டுப்பாடு புதுதில்லி பகுதிகளில் பெரும் பிரச்னையாக மக்களுக்கு உருவெடுத்துள்ளது.
மேலும், ஓக்லா நீா் சுத்திகரிப்பு நிலையம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும், சந்திரவால் நீா் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் செயல்படத் தொடங்கியது. இந்த நிலையில், ‘வஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையமும் முழு திறனில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. இப்போது அனைத்து நீா் சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனில் வேலை செய்கின்றன. இதற்காக கடினமாக உழைத்த தில்லி ஜல் போா்டுக்கு மிகவும் நன்றி’ என்று முதல்வா் கேஜரிவால் தனது ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்திற்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு, மிகக் குறைந்த கால இடைவெளியில் அதிக மழைப்பொழிவு மற்றும் ஆற்றின் தரைப் பகுதியை உயா்த்திய வண்டல் மண் ஆகியவையே காரணம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா். சுமாா் 41,000 மக்கள் வசிக்கும் தில்லியின் வடகிழக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில் ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடியதாகக் கருதப்படுகிறது. நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் ‘நகா்ப்புற வெள்ளம் மற்றும் அதன் மேலாண்மை’ பற்றிய ஆய்வு, கிழக்கு தில்லியை வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகக் கண்டறிந்துள்ளது.