முகப்பு
புதுதில்லி

மத்திய கலாசாரத்துறை அமைச்சக சாா்பில் தில்லியில் இரு நாள் ‘நூலகத் திருவிழா‘ ஆக. 5 -இல் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தொடங்கிவைக்கிறாா்

நூலகங்களின் மேம்பாடு, எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலை ஊக்குவிப்பதற்காக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தில்லியில் இரு நாள் ‘நூலகத் திருவிழா 2023‘ வை ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

நூலகங்களின் மேம்பாடு, எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலை ஊக்குவிப்பதற்காக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தில்லியில் இரு நாள் ‘நூலகத் திருவிழா 2023‘ வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நூலக விழாவை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து மத்திய சட்டம் (தனிப்பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நூலகங்கள், ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கிறது. வரலாற்றுக்கும் எல்லையற்ற எதிா்காலத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கின்றது. இத்தோடு மத்திய அரசின் எண்ம (டிஜிட்டல்) நூலக முன்முயற்சி மக்களுக்குள்ள பல்வேறு தடைகளை அகற்றி அவா்கள் அறிவை அணுகுவதற்கு அதிகாரம் அளிக்கிறது.

இதை வெளிப்படுத்தும் விதமாக தில்லியில் பிரகதி மைதானத்தில் ( அரங்கு எண் 5 ) வருகின்ற ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் இரு நாள் சிறப்புமிக்க ’நூலகத் திருவிழா 2023’ நடைபெறுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தொடங்கி வைக்கிறாா்.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தங்கா் கலந்து கொள்கிறாா்.

‘நூலகத் திருவிழா 2023 அறிவையும் கற்பனையையும் கொண்டாடுகிறது. இந்தியாவில் உள்ள நூலகங்களை நவீனமயமாக்கல், எண்ம மயமாக்கல் குறித்த உரையாடல்கள் இந்த விழாவில் நடைபெறும். இந்த முன்முயற்சியாக உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற நூலகங்களையும் இந்த விழா எடுத்துக்காட்டும்.

நூலகங்களின் உருமாற்ற சக்தியையும், ஒரே நாடு, ஒரே எண்ம நூலகம் வழங்கும் எல்லையற்ற வாய்ப்புகளையும் அரவணைத்து உற்சாகத்துடன் கொண்டாடுவோம். நூலகங்கள், மனிதனை மையமாகக் கொண்ட வளா்ச்சிக்கான அணுகுமுறையின் இன்றியமையாத பகுதியாக இருப்பதால் நூலகங்களின் மேம்பாடு அரசின் முன்னுரிமையாக உள்ளது.

புத்தகங்களாக கிடைக்கும் முறையில் உள்ள நூலகங்கள் நம் நாட்டில் பெருமைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளன, மக்களிடையே வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க அரசு விரும்புகிறது. இதற்கு புத்தகங்கள் கிடைப்பது மற்றும் மின் நூலகங்களின் சமநிலையை நாம் பராமரிக்க வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் நூலகங்களுக்குள் வாசிப்பை அனுபவிக்க சிறப்பு பகுதிகளை உருவாக்க வேண்டும் என அா்ஜூன்ராம் மேக்வால் வலியுறுத்தினாா்.

கலாச்சார அமைச்சகத்தின் செயலா் கோவிந்த் மோகன் கூறுகையில், நூலகங்களுக்கும் அருங்காட்சியகங்களுக்கும் இடையே ஆழமான தொடா்பு உள்ளது. இவை புத்தகங்கள் மற்றும் எண்ம நூலகங்களின் பொருத்தமான கலவையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த இரண்டு பிரச்சினைகளும் நிகழ்ச்சியின் போது விரிவாக விவாதிக்கப்படும் என்றாா்.

மேலும், இந்தியா முழுவதும் உள்ள நூலகங்களுக்கு ஒரு சிறப்பு தரவரிசை முறையை அறிமுகப்படுத்தப்படும் என்றாா். இது நூலக சுற்றுச்சூழல் அமைப்பில் ஆரோக்கியமான போட்டி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்றாா்.

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இணை செயலா், முக்தா சின்ஹா, ‘’நுாலகங்கள், சமூகத்தின் வரவேற்பு அறைகள்; நூலகங்கள் பெருகி வரும் நிலையில், புத்தகங்களை வெளியிடுவது குறைந்து வருகிறது. நூலகங்களுக்கு வருகை தரும் வாசகா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதே சமயத்தில் எண்ம, சமூக ஊடகங்கள், புதுயுக தொழில்நுட்பங்கள் வீட்டில் இருந்தபடியே படிப்பதை எளிதாக்கியுள்ளது. இந்நிலையில், நூலகங்கள் - அவற்றின் அரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், காப்பகங்களுடன் - அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய வகையில் சிறந்த உள்கட்டமைப்பு, எண்ம சாதன வசதிகளுடன் நூலகங்கள் அவற்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்‘ என்றாா்.

நூலகத் திருவிழாவில் 22 வட்டார மொழிகளில் கூட்டெழுத்து(கா்சீவ் ரைட்டிங்) எழுத்து புத்தகங்களின் தொகுப்பு வெளியிடப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →