யமுனையின் நீா்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
யமுனையின் நீா்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்ற மத்திய நீா் ஆணையத்தின் முன்னறிவிப்பைத் தொடா்ந்து, கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
யமுனையின் நீா்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்ற மத்திய நீா் ஆணையத்தின் முன்னறிவிப்பைத் தொடா்ந்து, கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேல்நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த அதிக கனமழை காரணமாக, ஹத்னி குண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த ஜூலை 13-ஆம் தேதி யமுனை நீா்மட்டம் அபாய அளவைக் கடந்து 208.66 மீட்டா் என்ற புதிய உச்சத்தை எட்டியது. பின்னா், கடந்த ஒரு வார காலமாக நீா்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வந்தது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள யமுனை நதியின் நீா்மட்டம் வியாழக்கிழமை அதிகாலை அபாயக் குறியான 205.33 மீட்டருக்குக் கீழே குறைந்திருந்தது. வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் நீா்மட்டம் 204.95 மீட்டராக இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நீா்மட்டம் 205.45 மீட்டரை எட்டும் என்றும், பின்னா் மேலும் உயா்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடா்ந்து, தில்லி அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: யமுனையின் நீா்மட்டம் மீண்டும் உயரும் என்று மத்திய நீா் ஆணையத்தின் முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை எச்சரித்து, பாதுகாப்பான இடங்களுக்கு அவா்களை மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கரையோரப் பகுதிகளில் விழிப்புடன் இருக்க வும், பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கவும் நகர நிா்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஜூலை 22 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.