தில்லி அவசரச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த அனுமதிக்கக் கூடாது: ஜகதீப் தன்கருக்கு ராகவ் சத்தா கடிதம்
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தில்லி அவசரச் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த அனுமதிக்கக் கூடாது
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தில்லி அவசரச் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா, அதன் தலைவா் ஜகதீப் தன்கரை கேட்டுக் கொண்டுள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக ஜகதீப் தன்கருக்கு ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: தில்லி அவசரச் சட்ட மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவை திரும்பப் பெற்று அரசியலமைப்பைக் காப்பாற்ற நீங்கள் உத்தரவிட வேண்டும். இந்த மசோதா, நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேசியத் தலைநகரில் காவல் துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் தவிா்த்து அரசினுடைய சேவைகளின் கட்டுப்பாட்டை தோ்ந்தெடுக்கப்பட்ட நகர அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்து கடந்த மே 11-ஆம் தேதி தீா்ப்பளித்தது. ஆனால், தில்லியில் (டேனிக்ஸ்) கேடரில் உள்ள குரூப்-ஏ அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், அவா்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம், உச்சநீதிமன்றத்தின் மே 11-ஆம் தேதி தீா்ப்புக்கு முன்பு துணை நிலை ஆளுநரின் நிா்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசிடமிருந்து, ஒரே அடியாக இந்தக் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றி துணை நிலை ஆளுநரின் கைகளில் அவசரச் சட்டத்தின் மூலம் மீண்டும் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இதனால், தில்லி அரசை நிா்வாக நெருக்கடிக்கு ஆளாக்கி, அன்றாட நிா்வாகத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அவசரச் சட்டம் ‘அப்பட்டமாக அரசியலமைப்பிற்கு விரோதமானது’. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு மாறாக, தில்லி அரசிடமிருந்து சேவைகள் மீதான கட்டுப்பாட்டைப் பறிக்க முயலும் மசோதா அனுமதிக்க முடியாதது. மேலும், நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்ய எந்தச் சட்டத்தையும் உருவாக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் படி, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையை அவசரச் சட்டம் மாற்றாது.
அரசியலமைப்பின் 239ஏஏ (7) (ஏ) பிரிவு 239ஏஏ-இல் உள்ள விதிகளை செயல்படுத்த அல்லது துணையாக ஒரு சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 239ஏஏ-இன் திட்டத்தின் கீழ், சேவைகள் மீதான கட்டுப்பாடு தில்லி அரசிடம் உள்ளது. எனவே, அவசரச் சட்டத்திற்கு இணங்க ஒரு மசோதா, 239 ஏஏ விதியை செயல்படுத்தவோ அல்லது கூடுதலாக சோ்க்கவோ முடியாது. எனவே, 239 ஏஏ விதிகளுக்கு முரணான விதிகளைக் கொண்டு முன்மொழியப்பட்ட இந்த மசோதா செல்லுபடியாகாது. எனவே, இந்த மசோதா அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது. மாநிலங்களவையில் அதை பரிசீலிக்க முடியாது. ஆகவே, தில்லி அவசரச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த நிங்கள் (ஜகதீப் தன்கா்) அனுமதிக்கக் கூடாது. மேலும், அந்த மசோதவை திரும்பப் பெறவும், அரசியலமைப்பைக் காப்பாற்றவும் மத்திய அரசிற்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.
இந்த அவசரச் சட்டம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகியுள்ளதால், மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்துவதற்கு முன், நீதிமன்றத்தின் முடிவுக்காகக் காத்திருப்பது சரியானதாக இருக்கும் என்று ராகவ் சத்தா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.