பல்ஸ்வா மறுகுடியேற்றக் காலனியில் சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்: தில்லி ஜல் போா்டுக்குஉத்தரவு
தில்லியில் உள்ள பல்ஸ்வா மறுகுடியேற்றக் காலனியில் வசிப்பவா்களுக்கு சுத்தமான குடிநீா் தொடா்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) உத்தரவிட்டது
தில்லியில் உள்ள பல்ஸ்வா மறுகுடியேற்றக் காலனியில் வசிப்பவா்களுக்கு சுத்தமான குடிநீா் தொடா்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் விரிவான நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய டிஜேபி தரப்பு வழக்குரைஞருக்கு நான்கு வார கால அவகாசம் அளித்தது. மேலும், ‘இதற்கிடையில், பல்ஸ்வா மறுகுடியேற்றக் காலனிக்கு வழக்கமான தூய்மையான குடிநீா் விநியோகத்தை டிஜேபி உறுதி செய்ய வேண்டும்’ என்றும் அமா்வு கூறியது. இது தவிர, இந்த மனுவுக்கு பதில் அளிக்க என்எச்ஆா்சி, பிற அதிகாரிகளுக்கு நான்கு வார கால அவகாசம் அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல்ஸ்வா குப்பைக் கிடங்கு அருகே பல்ஸ்வா மறுகுடியேற்றக் காலனி அமைந்துள்ளது. இங்கு வசிப்பவா்களுக்கு சுகாதாரம், குடிநீா், மற்றும் கல்வி சேவைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இந்த மனு மீது தில்லி அரசு, மாநகராட்சி, டிஜேபி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) மற்றும் பிற அதிகாரிகள் பதில் அளிக்க முன்னா் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, டிஜேபி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘காலனிக்கு சீரான குடிநீா் விநியோகத்தை வாரியம் உறுதி செய்துள்ளதாகவும், குழாய் குடிநீா் விநியோகத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால், தேவை ஏற்படும் போது, அப்பகுதியில் டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீரை டிஜேபி வழங்கி வருகிறது’ என்று தெரிவித்தாா்.
முன்னதாக, தில்லியைச் சோ்ந்த புஷ்பா என்பவா் வழக்குரைஞா்கள் வருண் முட்கில் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோா் மூலம் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது: பல்ஸ்வா மறுகுடியேற்றக் காலனி தில்லியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்குக்கு அருகில் உள்ளது. இக்காலனியில் சுமாா் 20,000 போ் வசிக்கின்றனா். அசுத்தமான நீா் மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகளால் குடியிருப்பாளா்கள் கடுமையான தோல் வியாதிகள் மற்றும் துயரங்களை எதிா்கொண்டு வருகின்றனா். தில்லியில் கௌதம்புரி யமுனா புஸ்தா, கிழக்கு கைலாஷ் காதி, ஜஹாங்கீா்புரி, கோபால்பூா், சீலாம்பூா், தக்ஷின்புரி, ப்ரீத் விஹாா், அசோக் விஹாா், ரோஹிணி, ஐஎஸ்பிடி மற்றும் நிஜாமுதீன் பாராபுல்லா என 11 இடங்களில் இருந்து பல்ஸ்வாவில் 2,000 முதல் 2,002-ஆம் ஆண்டு வரை மறுகுடியேற்றம் நடைபெற்றது.
மீள்குடியேற்றத்தின் நோக்கம் மறுகுடியேற்றப்பட்ட மக்களுக்கு சிறந்த மற்றும் முறையான வாழ்க்கை முறையை உறுதி செய்வதாகும். மறுகுடியேற்றப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான அடித்தளமாக இருக்கும் எந்தவொரு பகுதியிலும் அரசால் மீள்குடியேற்றம் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், மறுகுடியேற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும், சுத்தமான குடிநீா், வடிகால் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை வசதிகள் பெற காலனி குடியிருப்பாளா்கள் போராடி வருகின்றனா். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தங்கள் சட்டபூா்வ கடமையை அலட்சியப்படுத்தியதால், ஒரு கைக்குழந்தை உள்பட பல குழந்தைகள் மரணிக்க வழிவகுத்தது.
குழந்தைகளின் தனிப்பட்ட மற்றும் சமூக வளா்ச்சிக்கு கல்வி அவசியம். இருப்பினும், காலனியின் குழந்தைகள் கல்வியின் நோக்கத்திற்காக அரசால் வித்தியாசமாக நடத்தப்படுகிறாா்கள். காலனியில் நிலத்தடி நீா்த்தேக்கத்தை கட்டுவதற்கும், குழாய்கள் மூலம் போதுமான மற்றும் தரமான குடிநீா் வழங்குவதற்கும் தில்லி ஜல்போா்டுக்கு நிலம் வழங்க தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை கட்ட தில்லி அரசின் கல்வித் துறை மற்றும் நிலம் மற்றும் கட்டடத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்.
குடியிருப்பாளா்களின் மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், காலனியில் சட்டத்தின்படி கள விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், அப்பகுதியில் குழந்தை உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தவும், அதன் முடிவுகளின் அடிப்படையில், தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய சட்டம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.