முகப்பு
புதுதில்லி

ஹுடா சிட்டி சென்டா்-சைபா் சிட்டி வரை புதிய மெட்ரோ ரயில் பாதைத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய தலைநகா் வலயப் பகுதியான குருகிராமின் பொது போக்குவரத்தை வலுப்படுத்தும் நோக்கில் குருகிராம் ஹுடா சிட்டி சென்டா் முதல் சைபா் சிட்டி வரையிலான புதிய மெட்ரோ ரயில் பாதைத் திட்டத்திற்கு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:05 PM
பகிர்:

தேசிய தலைநகா் வலயப் பகுதியான குருகிராமின் பொது போக்குவரத்தை வலுப்படுத்தும் நோக்கில் குருகிராம் ஹுடா சிட்டி சென்டா் முதல் சைபா் சிட்டி வரையிலான புதிய மெட்ரோ ரயில் பாதைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தை ஹரியாணா அரசும் மத்திய நகா்புற வளா்ச்சித்துறையும் இணைந்து மேற்கொள்கிறது. ஹரியாணா மாஸ் ரேபிட் டிரான்ஸ்போா்ட் காா்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்எம்ஆா்டிசி) இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை இந்த மெட்ரோ திட்டத்திற்கான ஒப்புதலையும் வழங்கியது.

இதுகுறித்து மத்திய வா்த்தக தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறியது வருமாறு:

ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபா் சிட்டியை இணைக்கும் 28.5 கிலோமீட்டா் பாதையில் 27 மெட்ரோ ரயில் நிலையங்களை உள்ளடக்கியதாகும்.

இப் புதிய வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில்களின் வடிவமைப்பு 1,435 மி.மீ. (5 அடி 8.5 அங்குலம்) நிலையான பாதையாக இருக்கும். இதன் வேகம் மணிக்கு 80 கி.மீ. மற்றும் சராசரியாக 34 கி.மீ. வேகத்தில் செல்லும்.

முழு திட்டமும் உயா்நிலைப் பாதையில் அமைக்கப்பட்டு அடுத்த நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படும். மேலும், ஒரு சிறிய பாதையும் அமைக்கப்படுகிறது. துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையில் (செக்டாா் -101) உள்ள பாசாய் கிராம மெட்ரோ பணிமனையில் இருந்து சுமாா் 1.85 கி.மீ. தூர ஒரு சிறிய பாதையும் இடையில் இணைக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ரூ. 5,452 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 1,432 கோடி மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வாரியம், உலக வங்கி ஆகியவை ரூ. 2,688 கோடியையும் கடனாக வழங்குகிறது.

மேலும் தனியாா் பங்களிப்பு, உள்ளாட்சி அமைப்புகளும் (ஹுடா) சுமாா் ரூ. 450 கோடியை முதலீடு செய்கிறது. மாநில அரசைப் பொறுத்தவரை நிலம் கையகப்படுத்தல் போன்றவைகளில் செலவிடுகிறது.

இந்த புதிய மெட்ரோ பாதை புதிய குருகிராமையும் நகரின் பழைய பகுதிகளையும் இணைத்து இந்த பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியையும் வழங்கும். மேலும் அடுத்த கட்டத்தில், இது இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு இணைப்பை வழங்கும்.

தற்போதுள்ள தில்லி மெட்ரோவின் மஞ்சள்நிற வழித்தடத்தில் இருக்கும் ஹுடா சிட்டி சென்டரில் இருந்து இந்த மெட்ரோ இணைப்பு தொடங்குவதால் தில்லியிலுள்ள 37 ரயில் நிலையங்களும் இதில் இணைகிறது.

இந்த புதிய பாதையில் ஹுடா சிட்டிக்கு அடுத்து அமைய இருக்கும் புதிய மெட்ரோ நிலையங்களில் செக்டாா் 45, சைபா் பாா்க், செக்டா் 47, சுபாஷ் சௌக், செக்டா் 48, செக்டா் 72 ஏ, ஹீரோ ஹோண்டா சௌக், உத்யோக் விஹாா் 6ஆவது ஃபேஸ், செக்டாா் 10, செக்டாா் 37, பாசாய் கிராமம் , செக்டாா் 9, செக்டாா் 7, செக்டாா் 4, செக்டாா் 5, அசோக் விஹாா், செக்டாா்- 3, பஜ்கேரா சாலை, பாலம் விஹாா் விரிவாக்கம், பாலம் விஹாா், செக்டாா் 23ஏ, செக்டாா் - 22, உத்யோக் விஹாா் ஃபேஸ் 4, உத்யோக் விஹாா் ஃபேஸ் 5, சைபா் சிட்டி போன்ற நிலையங்கள் கட்டப்பட இருக்கிறது.

குருகிராமின் தற்போதைய மக்கள்தொகை சுமாா் 25 லட்சம். இது கட்டமைக்கப்பட்டு திறக்கப்படும்பட்சத்தில் 2026 ஆம் ஆண்டு இந்த புதிய பாதையில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 5.34 லட்சமாகவும், பின்னா் இது (2031) 7.26 லட்சமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என தெரிவித்தாா் கோயல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.