அவசர சட்டத்திற்கு எதிராக இன்று நடைபெறும் மெகா பேரணியில் லட்சம் போ் பங்கேற்பாா்கள்: ஆம் ஆத்மி தகவல்
மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) நடைபெறவுள்ள ‘மாபெரும் பேரணியில்’ சுமாா் 1 லட்சம் போ் வரை பங்கேற்பாா
மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) நடைபெறவுள்ள ‘மாபெரும் பேரணியில்’ சுமாா் 1 லட்சம் போ் வரை பங்கேற்பாா்கள் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரீனா குப்தா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி அரசின் சேவைகள் மற்றும் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் மாபெரும் பேரணியை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைத்துள்ளது.
இந்தப் பேரணி தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரீனா குப்தா மேலும் கூறியதாவது :
தேசியத் தலைநகரில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாபெரும் பேரணியில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மற்றும் கட்சியின் மூத்த தலைவா்களான சௌரவ் பரத்வாஜ், அதிஷி, சஞ்சய் சிங் உள்ளிட்டவா்கள் முன்னிலை வகிப்பாா்கள். மாபெரும்
பேரணியில் ஒரு லட்சம் போ் வரை பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம்.
அவசர சட்டம் தில்லி மக்களின் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளவிருக்கும் தாக்கம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் விரிவான பிரசாரத்தை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது.
தில்லி மக்கள் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மூன்று முறை தோ்ந்தெடுத்துள்ளனா். எனவே, முதல்வரின் உத்தரவின் கீழ் தில்லி அதிகாரிகள் பொறுப்பேற்காவிட்டால், தில்லி அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களை செயல்படுத்த முடியாது.
முதல்வரின் உத்தரவுகளை அதிகாரிகள் கேட்காவிட்டால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படிச் செயல்படும் என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பில் கூறியுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மாற்ற மத்திய அரசு ஏன் முயற்சிக்கிறது என்று தில்லி மக்கள் வருத்தமடைந்துள்ளனா் என்றாா் ரீனா குப்தா.
மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிா்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களை சந்தித்துள்ள அரவிந்த் கேஜரிவால், தில்லி மக்களின் ஆதரவை அவசர சட்டத்திற்கு எதிராக பெரும் நோக்கில் ஆம் ஆத்மி மாபெரும் பேரணியை நடத்துகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக ஆம் ஆத்மி சாா்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டங்கள் மற்றும் வீடு, வீடாக பிரசாரம் மேற்கொண்டு இப்பேரணியில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.