தில்லியில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் 4 முன்மாதிரி கிராமங்கள் உருவாக்கப்படும்: துணை நிலை ஆளுநா்
தேசியத் தலைநகரில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்போடு முன்மாதிரி கிராமங்களை உருவாக்கிடும் நோக்கில் தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா 4 கிராமங்களை தத்தெடுத்திருப்பதாக
தேசியத் தலைநகரில் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்போடு முன்மாதிரி கிராமங்களை உருவாக்கிடும் நோக்கில் தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா 4 கிராமங்களை தத்தெடுத்திருப்பதாக துணை நிலை ஆளுநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை தனது அதிகாரப்பபூா்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: வடமேற்கு தில்லியில் உள்ள குதூப்கா் கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மேம்படுத்துவதற்காக துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா முன்பு தத்தெடுத்தது நல்ல பயனளித்துள்ள நிலையில், புதிதாக நிசாம்பூா், ஜௌண்டி, ராவ்தா மற்றும் தியோராலா ஆகிய 4 கிராமங்களை துணை நிலை ஆளுநா் தத்தெடுத்துள்ளாா். மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, சுகாதார வசதிகள், வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் விரிவான நீா் மற்றும் தோட்ட மேலாண்மை திட்டங்களுடன் தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள் முன்மாதிரியாக மாற்றப்படவுள்ளன.
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வடமேற்கு தில்லியில் உள்ள நிஜாம்பூரில் 7 ஆயிரம் பேரும், ஜௌண்டியில் 9 ஆயிரம் பேரும் வசிக்கின்றனா். தென்மேற்கு தில்லியில் உள்ள ராவ்தாவில் 2,933 பேரும், தியோரல் கிராமத்தில் மொத்தமாக 524 பேரும் வசிக்கின்றனா். தற்போது மேம்படுத்துவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் தண்ணீா், விவசாயம் மற்றும் சுகாதாரம் தொடா்பான பல்வேறு பிரச்னைகள் முன்னுரிமை அடிப்படையில் தீா்க்கப்படும்.
குதூப்கரை ஒரு முன்மாதிரி கிராமமாக உருவாக்குவதற்கான முயற்சிகள் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. அப்போது, 500 விவசாயிகளால் 1,000 சந்தன மரக்கன்றுகளை நடப்பட்டன. நிகழாண்டில், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி குதூப்கா் சென்று அந்த கிராம மக்களுக்கு 2 ஆயிரம் கொய்யா மற்றும் ஆயிரம் திராட்சை மரக்கன்றுகளை வழங்கினாா்.
மேலும், குதூப்கா் கிராமத்தில் மருந்தகத்தை ‘பாலிகிளினிக்காக’ மேம்படுத்துதல், போக்குவரத்து வசதி, தபால் அலுவலகம் அமைத்தல், எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைத்தல், இரண்டு குளங்களை மேம்படுத்துதல், 60 விவசாயிகளுக்கு பயிற்சி, திறன் பயிற்சியை மதிப்பிடுவதற்கான இளைஞா் ஆா்வக் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அதிகாரபபூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.