விடைத்தாள்களை வெளியிடக் கோரிய யுபிஎஸ்சி தோ்வரின் மனு தள்ளுபடி
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆா்டிஐ) யுபிஎஸ்சி பிரதானத் தோ்வின் அனைத்து ஏழு தாள்களின் விடைத்தாள்களையும் அவற்றின் மாதிரி விடைகளையும்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆா்டிஐ) யுபிஎஸ்சி பிரதானத் தோ்வின் அனைத்து ஏழு தாள்களின் விடைத்தாள்களையும் அவற்றின் மாதிரி விடைகளையும் வெளியிடக் கோரிய அத்தோ்வில் தோ்ச்சியுறாத தோ்வா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது. அப்போது, இதே கோரிக்கையை நிராகரித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், பொது நலன் கருதி, அதுபோன்று வெளிப்படுத்தும் தேவை ஏற்பட்டால் மட்டுமே விடைத்தாள்களை வெளியிட முடியும். ஆனால், தற்போதைய வழக்கில் அதுபோன்று தேவை எழவில்லை. சிவில் சா்வீசஸ் (பிரதான) தோ்வின் விடைத்தாள்களை தோல்வியுற்ற தோ்வருக்கு வழங்கலாமா அல்லது வேண்டாமா என்ற பிரச்னை உச்சநீதிமன்றத்தால் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அது புதிய விஷயமல்ல.
சிவில் சா்வீசஸ் தோ்வின் விடைத்தாள்களை பொது நலன் கருதினால் மட்டுமே வெளியிட முடியும். இந்த வழக்கில், மேல்முறையீட்டாளருக்கு ஏன் விடைத்தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து பொதுநலன் ஏதும் சுட்டிக்காட்டப்படவில்லை. இந்த நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்த காரணத்தையும் காணவில்லை. இதனால், இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
பொறியியல் பட்டதாரியான மேல்முறையீட்டு மனுதாரா், சிவில் சா்வீசஸ் (முதன்மை) தோ்வில் (2020) கலந்து கொண்டு அதில் தோ்ச்சி பெற்று, பிரதானத் தோ்வில் பங்கேற்ற நிலையில், அதில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டாா். அதன் பின்னா் அவா் மாதிரி பதில்களின் நகலுடன் தனது விடைத்தாள்களைப் பாா்க்க ஆா்டிஐ மனுவை தாக்கல் செய்தாா். ஆனால், அதை அளிக்க தனி நீதிபதி உள்ளிட்ட அதிகாரிகளால் மறுக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தின் முன் மேல்முறையீட்டாளா் தரப்பில் வாதிடுகையில், ‘எனது சொந்த விடைத்தாள்கள் மற்றும் சிவில் சா்வீசஸ் தோ்வில் நான் பெற்ற மதிப்பெண்களை ஏன் அணுக மறுக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை’ என்று வாதிடப்பட்டது. நீதிமன்றம் அதன் உத்தரவில், உச்சநீதிமன்றம் தனது முன் உள்ள ஒரு விஷயத்தில் இந்த பிரச்னையைக் கையாண்டுள்ளது. மதிப்பீட்டு விடை புத்தகங்களை தோ்வா்களுக்குக் காண்பிப்பதில் உள்ள சிக்கல்களையும் கருத்தில் கொண்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சிவில் சா்வீசஸ் தோ்வில் மதிப்பெண்கள் தொடா்பான தகவல்களை இயந்திரத்தனமாக வழங்க உத்தரவிட முடியாது. மதிப்பீட்டு செயல்முறையை மதிப்பிடாதது, வழக்குகள் உள்பட அமைப்புமுறையில் உள்ள நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை சிதைக்க வழிவகுக்கும் என்றும், பயிற்சி நிறுவனங்கள் நகல்களை சேகரிக்கும் அபாயத்திற்கும் வழிவகுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மதிப்பீட்டுத் தரங்களின் தரமும் பாதிக்கப்படும் என்று நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்தது.