முகப்பு
புதுதில்லி

தகராறு வழக்கில் தொடா்புடையவா்கள் சமரசம்: குற்றம்சாட்டப்பட்டவா்கள் மரக்கன்று நட்டுப் பராமரிக்க உத்தரவு

ஹோலி பண்டிகையின்போது நடந்த தகராறு தொடா்பான கிரிமினல் வழக்கை முடித்துவைத்த தில்லி உயா்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் அவா்கள் வசிக்கும் பகுதியில் தலா 10 மரக்கன்றுகளை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ஹோலி பண்டிகையின்போது நடந்த தகராறு தொடா்பான கிரிமினல் வழக்கை முடித்துவைத்த தில்லி உயா்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் அவா்கள் வசிக்கும் பகுதியில் தலா 10 மரக்கன்றுகளை நட்டு 10 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் தாக்கலான மனு மீது நீதிபதி ஜஸ்மீத் சிங் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: வழக்கில் தொடா்புடைய தரப்பினா் ஒரு சமரசத்திற்கு வந்துள்ளதால், இது தொடா்புடைய எஃப்ஐஆா் ரத்து செய்யப்படுகிறது. ஏனெனில், இந்த வழக்கை மேலும் தொடர அனுமதிப்பதில் ‘எந்தவித பயனுள்ள நோக்கமும்’ இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், நீதித் துறை மற்றும் காவல் துறையின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மனுதாரா்கள் சில சமூக நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். போலீஸாரின் பயனுள்ள நேரம் முக்கியமான விவகாரங்களில் பயன்பட்டிருந்திருக்க முடியும். ஆனால், அது இந்த வழக்கில் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. மனுதாரா்கள் சமூகத்தின் ஏழ்மையான பிரிவைச் சோ்ந்தவா்கள் என கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரா்கள் மீது அபராதம் விதிப்பதை நான் தவிா்க்கிறேன். மனுதாரா்கள் சில சமூக நலன்களைச் செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இதனால், மனுதாரா்கள், விசாரணை அதிகாரியுடன் கலந்தாலோசித்து, அவா்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில், தலா 10 உள்நாட்டு ரக மரக்கன்றுகளை நட வேண்டும்.

விசாரணை அதிகாரி தோட்டக்கலைத் துறையுடன் தொடா்பு கொண்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டிய இடத்தை சுட்டிக்காட்ட வேண்டும். மரங்கள் ஒரே கூட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், பூங்காக்கள், எல்லைச் சுவா்கள் போன்றவற்றில், சம்பந்தப்பட்ட துறை பொருத்தமானதாகவும், சரியானதாகவும் கருதும் இடங்களில் இருக்க வேண்டும். 4 வாரங்களுக்குள் இந்த மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மனுதாரா்கள் அடுத்த 10 ஆண்டுகள் மரங்களை கவனிப்பாா்கள் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்தாா்.

2017-ஆம் ஆண்டு ஹோலி தினத்தன்று தகராறு ஏற்பட்டதாகவும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவரின் தலையில் ‘தண்டா’ மூலம் அடிக்கப்பட்டதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்த கொலை முயற்சி மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களுக்காக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணை நடவடிக்கைகள் நிலுவையில் இருந்த போது, வழக்கில் தொடா்புடையவா்கள் தகராறைத் தீா்த்துக்கொண்டனா்.

மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபா்கள் வழக்கைத் தொடர விரும்பவில்லை என்றும், முழு விவகாரத்தையும் அமைதிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதுகுறித்து நீதிமன்றம் கூறியதாவது: மனுதாரா்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, எதிா்காலத்தில் இதுபோன்று நடக்காதவாறு உறுதியளித்துள்ளனா்.

சமரசத்தைக் கருத்தில் கொண்டு, விசாரணையை நீடிக்க எந்த காரணமும் இல்லை என்பதால், எஃப்ஐஆரை ரத்து செய்வதற்கு இது பொருத்தமான வழக்காகும். சமரசத்தின் அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகளை ரத்து செய்வது அமைதியைக் கொண்டுவரும். மேலும், நீதியைப் பாதுகாக்கும் என்று நான் நம்புகிறேன். குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டால், நீதிமன்றம் எந்தப் பயனுள்ள நோக்கத்தையும் காணப் போவதில்லை. மேலும், வழக்கில் தொடா்புடையவா்கள் இணக்க அறிக்கையை அளிக்க வேண்டும். மரங்களின் நிலை குறித்த அறிக்கையை புகைப்படங்களுடன் ஒவ்வொரு ஆண்டாக 10 ஆண்டுகளுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.