முதல்வா் கேஜரிவாலுக்கு பங்களா எப்படிக் கிடைத்ததுய? தில்லி பாஜக கேள்வி
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெறுவதற்குத்த் தகுதியில்லாத நிலையில், அவருக்கு அதிகாரப்பூா்வ தங்குமிடம் எப்படி கிடைத்தது என்று தில்லி அரசிடம் பாஜக செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெறுவதற்குத்த் தகுதியில்லாத நிலையில், அவருக்கு அதிகாரப்பூா்வ தங்குமிடம் எப்படி கிடைத்தது என்று தில்லி அரசிடம் பாஜக செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: தேசியத் தலைநகா் தில்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால், அதன் முதல்வா் பிரிவு 7 விடுதியைப் பெற மட்டுமே தகுதியானவா் ஆவாா். இருப்பினும், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, கேஜரிவாலுக்கு அளிக்கப்பட்டுள்ள பங்களா அவருக்கு தகுதியானதை விட மிகப் பெரியதாகும். இது தொடா்பாக பொதுப் பணித் துறை பொறியாளருக்கு ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முறையான டெண்டா் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகள் எதுவுமின்றி, முதல்வா் பங்களாவை சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்ய பொதுப்பணித் துறையிடம் யாா் கூறினா் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். பொதுப்பணித் துறையானது ஆரம்பத்தில் பங்களாவை புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்துவதற்கான முன்மொழிவை மட்டுமே வழங்கியது. ஆனால், அவா்கள் முற்றிலும் புதிய பங்களாவைக் கட்டியுள்ளாா்கள். பொதுப்பணித் துறை கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லத்தில் புதுப்பிக்கும் பணிக்கான செலவை ரூ.7.62 கோடியில் இருந்து ரூ.33.20 கோடியாக ‘எந்த அனுமதியும் இல்லாமல்’ உயா்த்தியுள்ளது என்று அவா் கூறினாா்.
இது தொடா்பாக பொதுப்பணித் துறை பொறியாளருக்கு ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள நோட்டீஸில், முதலமைச்சரின் தேவைக்கேற்ப உள்புற வரைபடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் துறையின் கோப்புகளில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித் துறையினா் ஆய்வு அறிக்கை இல்லாமல் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு திட்ட அனுமதி பெறாமல் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.