முகப்பு
புதுதில்லி

தொழிலதிபா் சமீா் மகேந்துருக்கு எதிரான அமலாக்கத் துறையின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், மதுபான தொழிலதிபா் சமீா் மகேந்துருக்கு மருத்துவக் காரணங்களுக்காக தில்லி உயா்நீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமீன் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை அவரசமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வு முன் அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, இந்த விவகாரம் தொடா்பாக குறிப்பிட்டு, இந்த மனுவைஅவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். அதற்கு அவரசமாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, ‘யாரோ ஒருவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது... சிறைகளில் மக்கள் வாடி வருகின்றனா்’ என்று கூறியது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை விரைந்து பட்டியலிட உச்சநீதிமன்றத்தின் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனா்.

தொழிலதிபா் சமீா் மகேந்துருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி 6 வாரம் இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டிருந்தது. அதில், ‘குற்றம் சாட்டப்பட்டவா் உடனடி மருத்துவ கவனிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு தேவைப்படக்கூடிய உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஒவ்வொரு நபருக்கும் போதுமான மற்றும் திறம்பட சிகிச்சை பெற உரிமை உண்டு. இதனால், மனுதாரா் (மகேந்திரு) 10 லட்சம் தொகையில் தனிநபா் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு இரு நபா் உத்தரவாதமும் அளிக்கும்பட்சத்தில் அவருக்கு ஆறு வார காலத்திற்கு இடைக்கால ஜாமீனில் செல்ல சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் திருப்தியின் பேரில் அனுமதிக்கப்படுகிறாா். மனுதாரா் இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்த பிறகு, ஜூலை 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு விசாரணை நீதிமன்றத்தின் முன் சரணடைய வேண்டும். அவா் மருத்துவமனை மற்றும் அவரது வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. மேலும், நாட்டை விட்டு வெளியேறவும் கூடாது’ என்று நீதிபதி அமா்வு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) தொடா்புடைய விதிகளின் கீழ் மகேந்துருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தில்லி அரசு கடந்த 2021, நவம்பா் 17-இல் கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், 2022, செப்டம்பா் முடிவில் அது ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.