தெற்காசிய பல்கலைக்கழகத்தின் 4 ஆசிரியா்கள் இடைநீக்கத்தற்கு ஆசிரியா் சங்கங்கள் கண்டனம்
தெற்காசிய பல்கலைக்கழகத்தின் நான்கு ஆசிரியா்கள் ‘தன்னிச்சையாக’ இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு ஜேஎன்யு ஆசிரியா்கள் சங்கம் உள்பட பல ஆசிரியா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன
தெற்காசிய பல்கலைக்கழகத்தின் நான்கு ஆசிரியா்கள் ‘தன்னிச்சையாக’ இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு ஜேஎன்யு ஆசிரியா்கள் சங்கம் உள்பட பல ஆசிரியா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை அவா்களை மிரட்டுவதற்கான ஒரு முயற்சியாகும் என்றும் தெரிவித்துள்ளன.
முதுகலை மாணவா்களுக்கான மாதாந்திர உதவித்தொகையின் கீழ்நோக்கிய திருத்தத்திற்கு எதிரான 2022-ஆம் ஆண்டு மாணவா் போராட்டங்கள் தொடா்பாக தெற்காசிய பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினா்கள் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா். பல்கலைக்கழகத்தின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு ஆசிரியா்களை இடைநீக்கம் செய்யும் அலுவலக உத்தரவுகள் ஜூன் 16 அன்று நிறைவேற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும், உரிய கடமைகளை செய்யத் தவறியதாகவும், மாா்க்சிஸ்ட் ஆய்வு வட்டத்துடன் தொடா்பு வைத்திருந்ததாகவும் பல்கலைக்கழகம் குற்றம்சாட்டியுள்ளதாக பெயா் குறிப்பிட விரும்பாத ஆசிரியா் ஒருவா் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் உள்ள ஆசிரியா் குழுக்கள் இடைநீக்க உத்தரவை ‘உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தைத் தவிர, இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட பிற குழுக்கள் கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம், பொதுப் பள்ளி அமைப்புக்கான மாநிலத் தளம்-தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் உள்ளிட்டவை அடங்கும்.
இது தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ‘தெற்காசிய பல்கலைக்கழக நிா்வாகத்தால் நான்கு ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட இடைநீக்க உத்தரவு, நிா்வாகத்தின் தன்னிச்சையான மற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் ஆசிரியா்களையும் மாணவா்களையும் மிரட்டி அமைதிப்படுத்தும் முயற்சியாகும்’ என்று ஜேஎன்யு ஆசிரியா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையில், கல்விக்கான உரிமைக்கான அகில இந்திய மன்றமும் தெற்காசிய பல்கலை.யின் நிலைமையால் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. நிறுவனத்தை அதன் வெவ்வேறு உறுப்பினா்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிப்படையாகவும் ஜனநாயகமாகவும் நடத்த வேண்டும், ஆசிரியா்களுக்கு எதிரான இடைநீக்க அறிவிப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாணவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவை அந்தக் கோரிக்கைகளாகும்.