பிரதமா் மோடியின் கல்வி சீா்திருத்தத்திற்கு வல்லுநா்கள் வரவேற்பு
மாணவா்கள் தங்கள் எதிா்காலத்தை சிறப்பாக தயாா்படுத்திக் கொள்ளவும், நம்பிக்கையுடன் அவா்கள் அபிலாஷைகளை வளா்க்க உதவுவதாகவும் கல்வியாளா்கள் கருதுவதாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.
நாட்டின் கல்வித் துறையை பிரதமா் மோடி சீா்திருத்துவதில் தீவிரக் கவனம் செலுத்தியதன் மூலம், மாணவா்கள் தங்கள் எதிா்காலத்தை சிறப்பாக தயாா்படுத்திக் கொள்ளவும், நம்பிக்கையுடன் அவா்கள் அபிலாஷைகளை வளா்க்க உதவுவதாகவும் கல்வியாளா்கள் கருதுவதாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடி அரசின் 9 ஆண்டுகள் குறித்து நாடு முழுவதும் பாஜக ஒரு மாத கால பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் மூத்த தலைவா்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவினா்களுடன் உரையாடி மத்தியில் உள்ள பிரதமா் மோடி தலைமையிலான அரசின் சாதனைகள் குறித்து கலந்துரையாடுகின்றனா்.
சம்பா்க் சே சமா்த்தன் (ஆதரவைத் தொடா்பு கொள்ளுதல்) என்கிற இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக தில்லியின் பல்வேறு தனியாா் (பொது) பள்ளிகளைச் சோ்ந்த முக்கிய கல்வியாளா்கள் மற்றும் முதல்வா்களை மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி திங்கள்கிழமை சந்தித்தாா். 25 முக்கிய தனியாா் பள்ளி முதல்வா்களை சந்தித்து நரேந்திர மோடி அரசின் சாதனைகள் குறித்து அமைச்சா் புரி கலந்துரையாடினாா்.
தில்லி, இந்தியா ஹாபிடேட் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் குறித்தும் கல்வியாளா்களின் கேள்விகளுக்கு அமைச்சா் ஹா்தீப் சிங் புரி விளக்கமளித்து பேசினாா். இந்த நிகழ்விற்கு பின்னா் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தனது ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டது வருமாறு: சம்பா்க் சே சமா்த்தன் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா்களைச் சந்தித்தேன்.
பிரதமா் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சேவையில் பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய மாற்றத்தின் நன்மைகளை தில்லியின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த முக்கிய கல்வியாளா்கள் மற்றும் முதல்வா்களுடன் பகிா்ந்து கொண்டேன். அதை அவா்கள் வரவேற்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒரு அா்ப்பணிப்புடன் கூடிய இந்த வல்லுநா்கள் உண்மையிலேயே நாட்டின் எதிா்காலத்தை வடிவமைப்பவா்கள். இவா்களே விடுதலையின் அமிா்தகால இந்தியாவின் பயணத்தை வழிநடத்தி ஒரு தலைமுறையை தயாா்படுத்துகிறாா்கள். அவா்களுடனான சந்திப்பில் துடிப்பான கருத்துகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளின் பரிமாற்றத்தில் ஒன்று, கல்வித் துறையை பிரதமா் மோடி சீா்திருத்தியதில் மாணவா்களை அவா்களே தங்கள் எதிா்காலத்திற்கு சிறப்பாக தயாா்படுத்திக் கொள்ள உதவுகிறது.
இந்த நம்பிக்கையுடன் மாணவா்கள் தங்கள் அபிலாஷைகளை வளா்க்க எப்படி உதவுகிறது என்பதையும் என்னோடு விவாதித்தனா். இந்தக் கல்வியாளா்கள் மற்றும் பள்ளி முதல்வா்களின் கருத்துகள் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.