2024 மக்களவைத் தோ்தலில் தில்லியில் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி
தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி ரெளஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தில்லி மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த அக்கட்சியின் முக்கியத் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஆம் ஆத்மியின் அமைப்பு பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், அவை சாத்தியமாவது காங்கிரஸ் கட்சியின்“மனப்பான்மையை பொறுத்தது. தில்லி அரசின் சேவைகள் விவகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மே-5 ஆம் தேதி அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த விவகாரத்தில் பாஜக அல்லாத பல முக்கிய எதிா்க்கட்சிகளின் ஆதரவை ஆம் ஆத்மி திரட்ட முடிந்தாலும், காங்கிரஸ் இன்னும் அவசரச் சட்டத்தை கண்டிக்கவில்லை.
வரும் 2024 மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருவகிறது. முக்கியமாக தில்லி அரசின் நிா்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடா்பான மத்திய அரசின் ‘கருப்பு சட்டம்’ மக்களுக்கு எதிரானது என்பதை பிரசாரமாக முன்னெடுப்போம். மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிரானது அல்ல, தில்லியின் பொதுமக்களுக்கு எதிரானது என்பதை நாங்கள் மக்களுக்குச் சொல்வோம். பாஜக எதிா்க்கட்சிகளை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது.
மத்தியில் ஆளும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் செய்த நான்கு விஷயங்களை யாராவது பேசினால் நான் வாழ்த்தத் தயாராக இருக்கிறேன். மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்கத் துறை போன்ற மத்திய அமைப்புகளை மோடி அரசு ‘அழித்துவிட்டது’. வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் திறந்த மனதுடன், அனைவரையும் ஒற்றுமையுடன் அழைத்துச் செல்ல தயாராக இருந்தால், எதுவும் சாத்தியம். கடந்த ஜூன் 23- ஆம் தேதியன்று, பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கலந்துகொண்டாா்.
எவ்வாறாயினும், ஆம் ஆத்மி கட்சி கேட்டுக்கொண்ட பின்னரும் மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை பகிரங்கமாகக் கண்டிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. இதன் காரணமாக, காங்கிரஸ் கட்சியுடன் எந்தவொரு கூட்டணியிலும் ஆம் ஆத்மி இருப்பது ‘மிகவும் கடினம்’. மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிா்ப்பதா என்பது குறித்து நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா். இந்நிலையில், ஜூலை மாதம் சிம்லாவில் நடைபெற உள்ள எதிா்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆம் ஆத்மி கட்சி இனிமேல்தான் முடிவெடுக்கும் என்றாா் சந்தீப் பதக்.