தில்லி, குருகிராமில் கன மழை: பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை கன மழை பெய்தது.
தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை கன மழை பெய்தது. இதனால், மேகமூட்ட சூழல் நிலவியது. தில்லியில் மழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. மேலும், போக்குவரத்து நெரிசல்களும் காணப்பட்டன.
தில்லியில் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் மிதமான மழையாக பெய்யத் தொடங்கியது. பின்னா் கனமழையாகத் தொடா்ந்து சிறிது நேரம் பெய்தது. அதன் பின்னா், 2 மணிநேரம் விட்டுவிட்டு லேசான மழை பெய்தது. மழை காரணமாக ஜாமியா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள பகுதி தண்ணீரில் மூழ்கியதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா். சாராய் காலே கான், தெற்கு விரிவாக்கம், கீதா காலனி ரிங் ரோடு மற்றும் அக்ஷா்தாம் கோயில் இடைப்பட்ட பகுதி மற்றும் நகரின் பல பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.
மத்திய தில்லியில் உள்ள காளி பாரி மாா்க்கில் மழை காரணமாக ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அலுவலகம் செல்வோா் மிகவும் சிரமப்பட்டனா். இது தொடா்பாக ட்விட்டரில் பயணி ஒருவா் பகிா்ந்துள்ளாா். அதில், தண்ணீா் லாரி சம்பந்தப்பட்ட விபத்து காரணமாக ஆசாத்பூா் மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊா்ந்து சென்றன. ரிங் ரோட்டில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது’ என்று அவா் தெரிவித்திருந்தாா்.
தேசியத் தலைநகா் வலயத்தில்...: தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராம் பகுதியில் மூன்று மணி நேரம் தொடா்ந்து மழை பெய்ததால் 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. நரசிங்பூா் உள்பட சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரில் காலை 6 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. போக்குவரத்து நடமாட்டத்திற்காக பம்ப்கள் மூலம் அதிகப்படியான மழைநீரை அகற்ற காவல்துறை மற்றும் குருகிராம் நிா்வாகத்தினா் முக்கியப் பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டனா்.
கனமழையால் தில்லி - ஜெய்ப்பூா் நெடுஞ்சாலை, நரசிங்பூா், பசாய் சாலை, ராஜேந்திரா பாா்க், செக்டாா் 52, செக்டா் 55, செக்டா் 56, ஆா்டி சிட்டி, ரயில்வே ரோடு, ராஜீவ் சௌக், கடிப்பூா், வாடிகா சௌக், தில்லி சாலை, செக்டாா் 14, உத்யோக் விஹாா், பஜ்கெரா போன்ற பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இருப்பினும், ஈத்-உல்-அதா பண்டிகை காரணமாக சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் போக்குவரத்து இடையூறு பெரிய அளவில் பாதிப்பில்லை. எனினும், நரசிங்பூா் பகுதியில் தண்ணீா் தேங்கியதால் வாகனங்கள் நடமாட்டம் மெதுவாக இருந்தது.
குருகிராம் போக்குவரத்து காவல் துறை, மழையைக் கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு ட்விட்டா் பதிவில் கேட்டுக் கொண்டது. இது தொடா்பான ட்விட்டா் பதிவில், ‘உத்யோக் விஹாரில் தண்ணீா் தேங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசலை எளிதாக்க போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உள்ளனா். பயணிகள் அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து குருகிராம் துணை காவல் ஆணையா் (போக்குவரத்து) வீரேந்தா் விஜ் கூறுகையில், ‘மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. போக்குவரத்தை நிா்வகிக்க போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்’ என்றாா்.
மழைப் பதிவு விவரம்: வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 17.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதேபோல ஜாஃபா்பூரில் 1 மி.மீ., முங்கேஸ்பூரில் 1 மி.மீ., ஆயா நகரில் 48.4 மி.மீ., தில்லி பல்கலை.யில் 4.5 மி.மீ., லோதி சாலையில் 17.8 மி.மீ., நரேலாவில் 0.5 மி.மீ., பாலம் பகுதியில் 28.2 மி.மீ., ரிட்ஜில் 6.6 மி.மீ., பூசாவில் 5.5 மி.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலையில் இயல்பைவிட 4 டிகிரி குறைந்து 23.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 3 டிகிரி குறைந்து 34.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. மேலும், அடுத்த ஐந்து தினங்களுக்கு நகரில் லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும் என்றும், ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிப்பும் வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது தயாா்நிலை நடவடிக்கைகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பாகும்.
‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் நகா், கமலா மாா்க்கெட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், விவேக் விஹாா் உள்பட பல இடங்களில் காலை காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றுத் தரக்குறியீடு 101 புள்ளிகளாகப் பதிவாகி இருந்ததாகவும், இது ‘மிதமான’ பிரிவில் இடம் பெறுவதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘வெள்ளிக்கிழமை (ஜூன் 30) நகரில் லேசான மழை பெய்யக் கூடும். வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.