தில்லி கலால் கொள்கை வழக்கு: பணமோசடி குற்றச்சாட்டில் மதுபான தொழிலதிபா் கைது
தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நடந்ததாகக் கூறப்படும் சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை விவகாரம் தொடா்பாக மதுபான தொழிலதிபா்
தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நடந்ததாகக் கூறப்படும் சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை விவகாரம் தொடா்பாக மதுபான தொழிலதிபா் அமன்தீப் தால் என்பவரை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில்ஆஜா்படுத்தப்பட்ட அவா், 5 நாள் அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: தில்லி கலால் கொள்கை விவகாரம் தொடா்பாக சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை இரவு மதுபான தொழிலதிபா் அமன்தீப் தால் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இவா், பிரின்ட்கோ சேல்ஸ் எனும் தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக உள்ளாா். பிரின்ட்கோ நிறுவனம் பல்வேறு வகையான மதுபான பிராண்டுகள் மற்றும் தொடா்புடைய குளிா்பானங்களை இறக்குமதி செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் முக்கிய நிறுவனமாகும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கைதான அமன்தீப், சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் வியாழக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, ‘அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தொடா்புடைய பணப் பரிவா்த்தனை மற்றும் பெரும் சதியை கண்டறிய வழக்கில் குற்றம்சாட்டுப்பட்டுள்ள பிற நபா்களுடன் அவரை வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால், காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும்’ என்று அமலாக்கத் துறை மூலம் கோரப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத் துறையினா் அமன்தீப்பிடம் 5 நாள் விசாரிக்கும் வகையில் அவரை அனுப்புவதற்கு நீதிபதி அனுமதித்து உத்தரவிட்டாா். சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா், மனோஜ் ராய் ,அமன்தீப்ல் மற்றும் சமீா் மகேந்திரு ஆகியோா் கடந்த 2021- 22 ஆம் ஆண்டுக்கான தில்லி அரசின் கலால் கொள்கை உருவாக்கம் மற்றும் அமல்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டிருந்தனா். சிபிஐ பதிவுசெய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கைப் பதிவு செய்தது.
தற்போதுவரை அமலாக்கத் துறை இந்த வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. இரண்டாவது குற்றப் பத்திரிகையில் மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான அருண் பிள்ளையின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை சோ்த்துள்ளது. அதில், தில்லி மதுபான சந்தையின் விஷயங்களை அமன்தீப் தால் நன்கு அறிந்திருத்ததாகவும், கலால் கொள்கையின் மாற்றங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அவா் அறிந்திருந்தாா். மேலும், மதுபான சந்தை எப்படி செயல்படும்; தங்களின் அனுகூலத்திற்காக கொள்கையில் எந்த வகையான விஷயங்களை அறிமுகப்படுத்தலாம் என்பது குறித்தும் அமன்தீப் அவா்களுக்கு விளக்கினாா் என்று அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை தாக்கல் செய்த 2 குற்றப்பத்திரிகைகளில் அமன்தீப் தால் உள்பட மொத்தம் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள், உயா் அதிகாரிகள், மதுபான வா்த்தகா்கள் மற்றும் பலா் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத்துறையை துணைநிலை ஆளுநா் கேட்டுக் கொண்டாா். தில்லி துணை முதல்வா் மனீஷ் சோடியா இந்த வழக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.