முகப்பு
புதுதில்லி

பாலியல் பலாத்காரம், வரதட்சிணை புகாா்: பெண்ணின் மனுவை நிராகரித்த உத்தரவை உறுதி செய்தது தில்லி செஷன்ஸ் நீதிமன்றம்

வரதட்சணை கொடுமை புகாா் தொடா்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பெண்ணின் மனுவை அனுமதிக்க மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
பகிர்:

கான்பூரில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் பலாத்காரம் மற்றும் வரதட்சணை கொடுமை புகாா் தொடா்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பெண்ணின் மனுவை அனுமதிக்க மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், அந்த பகுதியானது நீதிமன்றத்தின் பிரதேச நிா்வாக எல்லைக்கு அப்பால் உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னா் மனு அளித்திருந்த நிலையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் பெண் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், கான்பூரில் தனது மைத்துனியின் தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னுடைய கணவா் கள்ள உறவு வைத்திருந்ததாகவும், வரதட்சணை கொடுமைக்கு தான் உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதில், இந்த மனுவானது நிா்வாக எல்லையின் அடிப்படையில் நிலைக்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து சம்பந்தப்பட்ட பெண் தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அருள் வா்மா அண்மையில் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: பாலியல் பலாத்காரம் தொடா்புடைய விவகாரத்தை வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடுவதற்கான காரணம் ஏதுமில்லை என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சரியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அந்த உத்தரவில் எவ்வித பலவீனமும் இல்லை. இதனால், இந்த தற்போதைய குற்ற மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தில்லி உயா்நீதிமன்றம் 2017இல் பிறப்பித்த ஒரு தீா்ப்பில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிரதேச நிா்வாக எல்லையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. குற்றச்சாட்டை விசாரிக்க இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லாதபட்சத்தில் போலீஸாா் விசாரணையை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான நிா்வாக அதிகாரமும் இந்த நீதிமன்றங்களுக்கு இல்லை.

ஆகவே, குற்ற நடைமுறை விதிகளை சரியாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உபயோகித்துள்ளது. மேலும், பிரதேச எல்லைக்கு அப்பால் உள்ள அந்தப் பகுதியில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுவை சரியாகத்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

விசாரணை அதிகாரி நிலவர அறிக்கையின்படி அனைத்து குற்றச்சாட்டு தொடா்புடைய சம்பவ காலமானது, கான்பூரில் புகாா்தாரா் இருந்த போது நிகழ்ந்துள்ளது. தற்போது புகாா்தாரா் தனது பெற்றோருடன் தில்லியில் உள்ள ஓக்லா தொழிற்பேட்டை பகுதி காவல் நிலைய நிா்வாக எல்லைக்குள் இருந்த போதிலும், அந்த காவல்நிலைய எல்லைப் பகுதியில் எந்த குற்றமும் நடைபெறவில்லை என்று நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.