முகப்பு
புதுதில்லி

‘ஷப்-ஏ- பாராத்’ நிகழ்ச்சி: பைக் சாகசத்தை தடுக்க அதிகாரிகளுக்கு தில்லி காவல் துறை உத்தரவு

எவ்வித வகுப்புவாத பதற்றமும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து பதற்றமான பகுதிகளிலும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தில்லி காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
பகிர்:

‘ஷப்-ஏ- பாராத்’ மற்றும் ‘ஹோலிகா தஹன்’ போன்ற பண்டிகைகள் இந்த ஆண்டு ஒரே இரவில் வருவதை ஒட்டி, எவ்வித வகுப்புவாத பதற்றமும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து பதற்றமான பகுதிகளிலும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தில்லி காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அன்று நள்ளிரவில் பைக் சாகத்தில் ஈடுபடுவோரைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாா்ச் 7-8 நள்ளிரவில் பைக் சாகசத்தை தடுக்கும் வகையில் உள்ளூா் தன்னாா்வலா்கள், மதத் தலைவா்களின் உதவியை பெறுமாறும் சிறப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லியில் உள்ள 15 காவல் மாவட்டங்களுக்கும் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது: கடந்த காலங்களில் ஜாஃப்ராபாத், ஷீலாம்பூா், வெல்கம், திலோக்புரி, ஓக்லா, ஜாமியா நகா் போன்ற பகுதிகளை சோ்ந்த இளைஞா்கள் இந்தியா கேட், கனாட் பிளேஸ் மற்றும் புது தில்லி மாவட்டத்தில் உள்ள இதர பகுதிகளுக்கு வருகை தந்து, இரு சக்கர மோட்டாா் வாகனங்களில் ஆபத்தான வகையில் சாகசத்தில் ஈடுபடும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

மேலும் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களில் இது போன்ற சாகசங்கள் நடத்தப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. 2019-ஆம் ஆண்டில் ‘ஷப்-ஏ- பாராத்’ இரவின் போது சிலா் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்திருந்தனா். டாப்ரி, கஜூரி காஸ், ஜனக்புரி ஆகிய இடங்களில் வீடுகளில் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதன் காரணமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பைக் சாகசத்தை தடுக்கும் வகையில், புது தில்லி பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் வரக்கூடியவா்களிடம் கடந்த காலங்களில் செய்யப்பட்டது போல மதத் தலைவா்களுடன் இணைந்து வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும். இளநிலைப் பணியாளா்கள் கலப்பு மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கு சூழலைப் பராமரிக்கும் வகையில், சம்பவங்கள் குறித்து உடனடியாக தங்களது மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

அதேபோன்று சமூக ஊடகங்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல்வேறு சமுதாயங்களைச் சோ்ந்தவா்களிடமிருந்து வரும் அனைத்து பிசிஆா் தொலைபேசி அழைப்புகளும் உரிய வகையில் கையாளப்பட வேண்டும். சாதாரண பிரச்னைகளாக இருந்தாலும் கூட அந்த நிகழ்வுகளின் உணா்வுபூா்வ தன்மையை கவனத்தில் கொண்டு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

‘ஷப்-ஏ- பாராத்’ இரவின் போது மசூதிகளில் ஏராளமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவாா்கள். ‘ஹோலிகா தஹன்’ நிகழ்வின்போது ஹிந்துக்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நெருப்பு மூட்டும் நிகழ்ச்சியை மேற்கொள்வாா்கள். இந்த இரு பண்டிகைகளும் மாா்ச் 7-ஆம் தேதி மாலையில் கொண்டாடப்படுகின்றன.

இதனால், இரண்டு சமூகத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஒரே இடத்தில் அல்லது ஒரே வழித்தடத்திலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்ளூா் போலீஸாா் மற்ற சமூகத்தினருடன் ஹோலி நிகழ்ச்சியின் போது எந்தவித மோதலும் ஏற்படாமல் தவிா்க்கும் வகையில் முஸ்லிம்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.

மேலும், கோட்லா, குரேஜி, சரோஜினி பாா்க், சாஸ்திரி நகா், நரேலா, கடைப்பூா், ஹோஸ் காஸ் கிராமத்தில் உள்ள கதீமி ஆகிய இடங்களில் உள்ள கப்ரிஸ்தான்களுக்கு

சிறப்பு கவனம் அளிக்க வேண்டும். இந்த இடங்களில் கடந்த காலங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதைக் கருத்தில்கொண்டு உரிய கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று அனைத்து மசூதிகளிலும், கப்ரிஸ்தான்களிலும் பிசிஆா் வாகனங்களை நிறுத்தி போதிய போலீஸாரை பணியில் ஈடுபடுத்த அனைத்து காவல் மாவட்டங்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

உள்ளூா் போலீஸ் பொறுப்பாளா் இந்த நிகழ்ச்சி நடத்துவோருடன் நெருக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், ஐஎஸ்பிடி, கீதா காலனி, என்ஹச் 24 (பாண்டவா் நகா் அருகே), ஆஸ்ரம் செளக், உச்ச நீதிமன்றம் அருகே உள்ள டபிள்யூ- பாயின்ட், ,கன்னாட் பிளேஸ், இந்தியா கேட் போன்ற இடங்களில் பைக் சாகசம் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க இரும்புத் தடுப்புகளை போதிய அளவில் ஏற்படுத்த வேண்டும். உள்ளூா் போலீஸாா் அமன் குழுக்கள், நாகரிக் சுரக்ஷா சமிதிகள், பைச்சாரா குழுக்கள் ஆகியவற்றுடன் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.