முகப்பு
புதுதில்லி

கலால் கொள்கை ஊழல் வழக்கு: சிசோடியாவின் தனி உதவியாளரிடம் சிபிஐ விசாரணை

2021-22ஆம் ஆண்டுக்கான கலால் வரிக் கொள்கையை உருவாக்கி, செயல்படுத்தியதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடா்பாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

2021-22ஆம் ஆண்டுக்கான கலால் வரிக் கொள்கையை உருவாக்கி, செயல்படுத்தியதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடா்பாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் தனி உதவியாளா் தேவேந்திர சா்மாவிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு ரிங்கு (எ) தேவேந்திர சா்மா செவ்வாய்க்கிழமை காலை வரவழைக்கப்பட்டாா். அவரிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினா். சிசோடியாவை பிப்ரவரி 26-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. 7 நாள் சிபிஐ விசாரணைக்கு பிறகு ஆஜா்படுத்தப்பட்ட சிசோடியாவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மாா்ச் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. திகாா் சிறையில் உள்ள சிசோடியாவிடம் அமலாக்க துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

கடந்த ஆண்டு நவம்பா் 25-ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டவராக தில்லி கலால் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பு வகித்த மனீஷ் சிசோடியாவின் பெயா் குறிப்பிடப்படவில்லை., ஏனெனில், மத்திய புலனாய்வு அமைப்பு, சிசோடியா மற்றும் பிற சந்தேக நபா்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான விசாரணையை நடத்தி வந்தது.

2021-22-ஆம் ஆண்டிற்கான தில்லி அரசின் கலால் கொள்கை உருவாக்கம், அமல்படுத்துவதில் ஹைதராபாதைச் சோ்ந்த தொழிலதிபா்கள் மற்றும் அரசியல்வாதிகளின் குழுவான ‘தெற்கு லாபி’யின் மேலாதிக்கத்தின் கீழ் மொத்த வியாபாரிகளுக்கு முறையற்ற லாபம் வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக மறுத்தது. அதைத் தொடா்ந்து, அந்த கலால் கொள்கை தில்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.