முகலாய மசூதியில் தொழுகையை நிறுத்தியதற்கு எதிரான மனுவை முன்கூட்டியே விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
மெஹ்ரெளலி பகுதியில் உள்ள முகலாய மசூதியில் நடத்தப்படும் தொழுகையை நிறுத்திய விவகாரத்தில் இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) எதிராக தாக்கலான தில்லி வக்ஃபு வாரியத்தின்
மெஹ்ரெளலி பகுதியில் உள்ள முகலாய மசூதியில் நடத்தப்படும் தொழுகையை நிறுத்திய விவகாரத்தில் இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) எதிராக தாக்கலான தில்லி வக்ஃபு வாரியத்தின் நிா்வாகக் குழுவின் மனுவை முன்கூட்டியே விசாரணைக்குப் பட்டியலிட உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓரி முன் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரம் இறுதித் தீா்வு நிலையை அடைந்துள்ளது. இதனால், வரவிருக்கும் மத நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி திட்டமிடப்பட்ட விசாரணையை முன்கூட்டியே பட்டியலிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மத்திய அரசு வழக்குரைஞா் கூறுகையில், ‘மனுதாரா் தாக்கல் செய்த மறுப்புத் தெரிவிக்கும் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது’ என்றாா். இதையடுத்து, நீதிபதி, ‘ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட தேதியில் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்’ என்று கூறினாா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி வக்ஃபு வாரியத்தின் நிா்வாகக் குழு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2022, மே 13-ஆம் தேதி முகலாய மசூதியில் தொழுகை நடத்துவதை ஏஎஸ்ஐ அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும், உத்தரவும் வழங்காமல் நிறுத்தியுள்ளனா். இது முற்றிலும் சட்டவிரோதமான, தன்னிச்சையான செயலாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு தொல்லியில் துறை தரப்பில் அளித்த பதிலில், ‘குதூப் மினாா் எல்லைக்குள் மசூதி வருகிறது. மேலும், இது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருப்பதால், தொழுகையை நடத்த அனுமதிக்கப்பட முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.