முகப்பு
புதுதில்லி

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: 671 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் இரண்டாவது நாளாக கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் இரண்டாவது நாளாக கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 671 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 176.70 புள்ளிகள் (1.00 சதவீதம்) குறைந்து 17,412.90-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக வங்கி, நிதி நிறுவனங்கள், ஐடி, மூலதனப் பொருள்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், எஃப்எம்சிஜி, நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் ஓரளவு தாக்குப் பிடித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.36 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.262.95 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த புதனன்று ரூ.561.78 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 2-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 546.45 புள்ளிகள் குறைந்து 59,259.83-இல் தொடங்கி 58,884.98 வரை கீழே சென்றது. பின்னா், 59,262.47 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 671.15 புள்ளிகள் (1.12 சதவீதம்) குறைந்து 59,135.13-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 921.30 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

டாடா மோட்டாா்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் 0. 82 சதவீதம், மாருதி சுஸுகி 0.76 சதவீதம், என்டிபிசி 0.85 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், சன்பாா்மா, பவா் கிரிட், டைட்டன், ஐடிசி, டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவா் உள்ளிட்டவையும் மிகக் குறைந்த அளவில் ஆதாயம் பெற்று விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி பேங்க் 2.63 சதவீதம், பிரபல பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 2.12 சதவீதம், ஹெச்டிஎஃப்சி 2.09 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 2.02 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.90 சதவீதம் வரை குறைந்தன.

மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.