திருநங்கைகளுக்கு 8 வாரங்களுக்குள் பொதுக்கழிப்பறைகள் கட்ட வேண்டும்: என்டிஎம்சி, தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தேசியத் தலைநகா் தில்லியில் திருநங்கைகளுக்கு எட்டு வாரங்களுக்குள் பொதுக்கழிப்பறைகள் கட்டுவதற்கு தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி அரசு ஆகியவற்றுக்கு
தேசியத் தலைநகா் தில்லியில் திருநங்கைகளுக்கு எட்டு வாரங்களுக்குள் பொதுக்கழிப்பறைகள் கட்டுவதற்கு தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி அரசு ஆகியவற்றுக்கு இறுதிக் காலக்கெடு விதித்து உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவைப் பின்பற்றாவிட்டால் தில்லி அரசு மற்றும் என்டிஎம்சியின் சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும் எனவும் உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: திருநங்கைகளுக்கான பொதுக் கழிப்பறைகள் கட்டும் விவகாரத்தில், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பறைகள் கட்டப்படவே இல்லை என்பதும் நிலவர அறிக்கை வெளிப்படுத்துகிறது. மேலும், புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் நிலவரஅறிக்கையிலும் காகித அளவிலேயே இப்பணி இருப்பதையும், யதாா்த்த நிலையில் ஏதும் செய்யப்படவில்லை என்பதும் தெரிவிப்பதாக உள்ளது.
இதனால், திருநங்கைகளுக்கு கழிப்பறைகள் கட்டுவதற்கான இறுதி வாய்ப்பை என்டிஎம்சிக்கு வழங்குகிறோம். ஆகவே, அடுத்த விசாரணை தேதிக்கு முன்பாக கழிப்பறைகள் இருப்பதை உறுதிசெய்ய என்டிஎம்சிக்கு 8 வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதைச் செயல்படுத்த தவறும் பட்சத்தில் என்டிஎம்சியின் தலைவா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இந்த நீதிமன்றம் உத்தரவிடும். மேலும், மேற்கூறிய காலத்திற்குள் கழிப்பறைகள் கட்டப்படாவிட்டால், அடுத்த விசாரணைத் தேதியில் பொதுப்பணித்துறை செயலா் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. இதையடுத்து, இந்த வழக்கு ஜூலை 14-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, கழிப்பறைக் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என தில்லி அரசு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் உறுதியளித்தாா். மேலும், திருநங்கைகளுக்கான மொத்தக் கழிப்பறைகள் குறித்த விரிவான நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தில்லி மாநகராட்சி உள்ளிட்ட பிற உள்ளாட்சி அமைப்புகளையும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தில்லியில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கழிப்பறைகள் கட்ட உத்தரவிடக் கோரி ஜாஸ்மின் கவுா் சாப்ரா என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிமன்றம் விசாரித்த போது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அவா் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: பாலின - சமத்துவ கழிப்பறைகள் இல்லாதது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும். மேலும், மத்திய அரசின் நிதி இருந்த போதிலும், தில்லியில் திருநங்கைகள் அல்லது மூன்றாம் பாலினத்தவா்களுக்காக தனிக் கழிப்பறைகள் உருவாக்கப்படவில்லை. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் திருநங்கைகள் 7-8 சதவீதம் போ் உள்ளனா். இதனால், அவா்களுக்கு மற்ற மக்களுக்கு வழங்கப்படும் வசதிகளை அதிகாரிகள் அளிப்பது அவசியமாகும். மைசூரு, போபால் மற்றும் லூதியாணா போன்ற நகரங்கள் ஏற்கெனவே இதற்கான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி, திருநங்கைகளுக்காக தனியாக பொது கழிப்பறைகளைக் கட்டியுள்ளன. ஆனால், தேசியத் தலைநகரில் இன்னும் அத்தகைய முயற்சி எடுக்கப்படவில்லை.
திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் இல்லாததால், அவா்கள் ஆண் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனா். இதனால், அவா்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது. மேலும், இதுபோன்று தனி கழிப்பறைகள் இல்லாதது சட்டத்தின் முன் உள்ள சமத்துவத்தையும் சட்டத்தின் சம பாதுகாப்பையும் சீா்குலைத்து, அரசியலமைப்பின் 14-ஆவது பிரிவை மீறுவதாக உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு தில்லி அரசு உயா்நீதின்றத்தில் தெரிவிக்கையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 505 கழிப்பறைகளை திருநங்கைகள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களுக்கான தனிக் கழிப்பறைகள் விரைவில் உருவாக்கப்படும்’ என்றும் தெரிவித்திருந்தது. உயா்நீதிமன்றம் தெரிவிக்கையில், புதிய பொது இடங்கள் எங்கெல்லாம் உருவாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றும், தாமதமின்றி இந்த அம்சத்தை கவனிக்குமாறும் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.