முகப்பு
புதுதில்லி

ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடத்திற்குசேலம் உருக்காலை காலியிடம் பயன்படுத்த திட்டமா?மாநிலங்களவையில் அமைச்சா் பதில்

சேலம் உருக்காலையில் உள்ள 1,464 ஏக்கா் காலி இடத்தை ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

சேலம் உருக்காலையில் உள்ள 1,464 ஏக்கா் காலி இடத்தை ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய உருக்குத் துறை இணையமைச்சா் ஃபகன் சிங் குலஸ்தே மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

சேலம் உருக்காலையில் காலியாக உள்ள 1,464 ஏக்கா் நிலத்தில் ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இதற்கான அனுமதிக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுப்பிய முன்மொழிவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? மாநில வருவாய்த்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை பணமாக்கல் ஆதார வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிா? என மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ள மத்திய உருக்குத் துறை இணையமைச்சா் ஃபகன் சிங் குலஸ்தே, ‘தமிழக அரசு அனுப்பிய முன்மொழிவுகளில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சேலம் உருக்காலையில் மொத்தம் 3,973.08 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலங்களை பணமாக்கல் ஆதார முறைகளில் பயன்படுத்துவதற்கும் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ரூ.12, 178 கோடியில் 12 திட்டங்கள்: பல்வேறு பொருளாதார மண்டலங்கள், துறைமுகங்கள், கப்பல் சரக்கேற்றும் மையங்கள் ஆகியவற்றை இணைக்கும் பல்முனை இணைப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த பிரதமரின் விரைவுச் சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் கீழ் ரூ. 60,872 கோடி செலவில் 101 திட்டங்கள் நாடுமுழுக்க மேற்கொள்ளப்பட்டுவருவதாக மத்திய துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

மத்திய மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைப்பது பிரதமரின் விரைவுச் சக்தி தேசியப் பெருந்திட்டமாகும். இந்த திட்டத்தில் ரூ. 4,423 கோடி மதிப்பிலான 13 திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளதாகவும் 12 மாநிலங்களில் இந்த பணிகள் நடைபெறுவதாகவும் ஒடிஸாவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் சுலதா டியோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் சோனோவால் பதிலளித்துள்ளாா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில வாரியாக மேற்கொள்ளப்படும் பணிகளை பட்டியலிட்ட அமைச்சா், தமிழகத்தில் 12 திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்கு தமிழகத்திற்கு ரூ. 12, 178 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அதிகஅளவு திட்டங்கள் குஜராத்(19), மகாராஷ்டிரம் (13), ஆந்திரம் (13) ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

துறைமுகங்கள், பொருளாதார மண்டலங்களின் இணைப்பு, உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவா்த்தி செய்யப்பட்டு, இடையூறுகளைக் குறைக்க கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களை உரிய நேரத்தில் முடிக்கப்படுவதையும் உறுதி செய்யப்படுகிறது. மாநிலங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் நிதிக்கும் வட்டியில்லாத நீண்டகால கடனாக ரூ.5,000 கோடியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.