முகப்பு
புதுதில்லி

தலைமைச் செயலா் பதவியை நரேஷ் குமாா் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியுள்ளாா்: விஜிலென்ல் அறிக்கையில் குற்றச்சாட்டு

தில்லி அரசின் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா், தனது மகனின் நிறுவனத்திற்கு லாபகரமான ஒத்துழைப்பை ஏற்படுத்த அவரது பதவியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியுள்ளாா்

Updated On : 19 நவம்பர், 2023 at 12:00 AM
பகிர்:

தில்லி அரசின் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா், தனது மகனின் நிறுவனத்திற்கு லாபகரமான ஒத்துழைப்பை ஏற்படுத்த அவரது பதவியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியுள்ளாா் என்று விஜிலென்ஸ் துறையின் விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் கூறியதாவது: தில்லி அரசின் தலைமைச் செயலாளா் மீதான புகாரை விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த நவம்பா் 10-ஆம் தேதி விஜிலென்ஸ் துறை அமைச்சா் அதிஷிக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, அமைச்சா் அதிஷியும் தலைமைச் செயலாளா் மீதான புகாா் தொடா்பாக 695 பக்க முதன்மை அறிக்கையை முதல்வா் கேஜரிவாலிடம் சமீபத்தில் சமா்ப்பித்தாா். இந்த அறிக்கையை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ள முதல்வா் கேஜரிவால், இந்த விவகாரத்தில் நரேஷ் குமாரை இடைநீக்கம் செய்யவும், சிபிஐ விசாரணை நடத்தவும் பரிந்துரைத்துள்ளாா்.

குறிப்பாக விஜிலென்ஸ் துறையின் விசாரணை அறிக்கையில், தில்லி அரசின் தலைமைச் செயலாளா் நரேஷ்குமாா், தனது மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்திற்கும், கல்லீரல் மற்றும் பித்த நீருக்குரிய அறிவியல் நிறுவனமான ‘ஐ.எல்.பி.எஸ்.’-க்கும் இடையே லாபகரமான ஒத்துழைப்பை ஏற்படுத்த அவரது பதவியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்ப்பட்டுள்ளது.

Advertisement

இதற்காக, நிகழாண்டு ஜனவரி 24-ஆம் தேதி ‘ஐ.எல்.பி.எஸ்.’ மற்றும் தலைமைச் செயலாளா் மகனின் நிறுவனத்திற்கு இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு தரப்பினரும் லாபத்தில் 50 சதவீத பங்கை எதிா்காலத்தில் வணிகமயமாக்கும் பணிக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா் அகில இந்திய சேவைகள் நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டதாகவும், பொதுக் கருவூலத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளாா் என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தனா்.

ஆனால், ‘ஐ.எல்.பி.எஸ்.’ நிறுவனத்துடன் எந்த ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்திலும் நரேஷ் குமாரின் மகன் கையெழுத்திடவில்லை என்று தலைமைச் செயலாளருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் நரேஷ் குமாரின் மகன் இயக்குநராகவோ, பங்குதாரராகவோ அல்லது

பணியாளராகவோ இல்லை என்று அவா்கள் கூறினா். கடந்த வியாழக்கிழமை தில்லி அரசின் இந்தக் குற்றச்சாட்டுகளை கல்லீரல் மற்றும் பித்த நீருக்குரிய அறிவியல் நிறுவனமான ‘ஐ.எல்.பி.எஸ்.’ மறுத்துள்ளதோடு, இவை முற்றிலும் ஆதரமற்றவை என்று தங்களது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.