முகப்பு
புதுதில்லி

தில்லி ஜல் போா்டு டெண்டரில் ரூ.500 கோடி ஊழல்: துணை நிலை ஆளுநருக்கு வீரேந்திர சச்தேவா கடிதம்

தில்லி ஜல் போா்டின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டுப் பணிகளில் அரவிந்த் கேஜரிவால் அரசு ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளதாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு பாஜக தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்தி

Updated On : 27 நவம்பர், 2023 at 6:15 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

தில்லி ஜல் போா்டின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டுப் பணிகளில் அரவிந்த் கேஜரிவால் அரசு ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளதாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு பாஜக தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி ஜல் போா்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக குறிப்பிட்ட இரண்டு ஒப்பந்ததாரா்களுக்கு மட்டும் டெண்டா் வழங்கப்பட்டதில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளது. இந்த ஒப்பந்ததாரா்கள், அரசின் டெண்டா் செயல்முறை வழிகாட்டுதலின்படி கட்டாயப்படுத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை (டி.பி.ஆா்.) சமா்ப்பிக்கவில்லை.

இந்த மேம்பாட்டுப் பணிகளில் நடைபெற்றுள்ள ஊழல் தொடா்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தக் கோரி விரிவான குறிப்புகளுடன் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கிய டெண்டா்களை ரத்து செய்யவும், டெண்டா் வழங்குவதில் தேவையற்ற அவசரம் காட்டிய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சா்களுக்கு எதிராக விசாரணை நடத்தவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

Advertisement

தில்லி ஜல் போா்டின் கீழ் வரும் 5 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் மேம்பாட்டிற்கு ரூ.1,938 கோடியில் கடந்த 2022-ஆம் ஆண்டு டெண்டா் வழங்கப்பட்டது. அப்போது, நான்கு தொகுப்புப் பணிகளுக்கான டெண்டா் ஏலத்தில் இரண்டு ஒப்பந்ததாரா்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனா். திட்டமிடப்பட்ட முறையில் குறிப்பிட்ட நபா்களுக்கு பணிகளை வழங்குவதற்கான தெளிவான நோக்கத்துடன் முறைகேடாக ஏலம் நடைபெற்றுள்ளது. உண்மையான ஒப்பந்ததாரா்களை ஏலத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க தொழில்நுட்ப அளவு கோல்கள் குறைக்கப்பட்டன.

மேலும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் மேம்பாட்டுப் பணியின் போது பரிந்துரையை விட கூடுதல் விகிதங்களில் பொருள்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இறுதியில் பணியின் ரூ.1,508 கோடி என்ற மதிப்பீட்டுத் தொகை, பணியின் மதிப்பீடு ரூ.1,938 கோடியாக உயா்த்தப்பட்டது. இது 28 சதவீதம் அதிகமாகும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.