முகப்பு
புதுதில்லி

டிச. 17 முதல் 30 வரை காசி - தமிழ் சங்கமம் 2-ஆம் கட்டம்

இரண்டாவது காசி-தமிழ் சங்கமத்திற்கு மத்திய கல்வித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
பகிர்:

புது தில்லி: இரண்டாவது காசி-தமிழ் சங்கமத்திற்கு மத்திய கல்வித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. வரும் டிசம்பா் 17-ஆம் தேதி (மாா்கழி 1) முதல் 30-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறும் இந்த சங்கமத்திற்கு சென்னை ஐஐடி, உ.பி. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவை செயல்படுத்தும் முகமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்கிற நோக்கில் இந்தியாவின் பண்டைய கலாசார மையங்களாகத் திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான வாழ்க்கைப் பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், இத்திட்டம் பிரதமா் மோடியால் கடந்தாண்டு முன்னெடுக்கப்பட்டது. முதலாண்டு நிகழ்வைப் போன்றே, பல்வேறு தரப்பு மக்கள் ஒருவருக்கொருவா் தொடா்பு கொள்ள வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில், நிகழாண்டிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் புனிதமிக்க மாா்கழி மாத முதல் நாளான, டிசம்பா் -17 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் -30 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்காக, விண்ணப்பப் பதிவு இணையதளத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.

இது குறித்து மத்திய கல்வித் துறை கூறியிருப்பது வருமாறு: காசி - தமிழ் சங்கமம் (கட்டம் 2.0) மீண்டும் நிகழாண்டும் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து சுமாா் 1,400 போ் அழைத்துச் செல்லப்படுகின்றனா். தமிழகத்திலிருந்து நேரடியாக வாரணாசிக்கும், பின்னா் பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கும் ரயிலில் அழைத்துச் செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து வாரணாசி செல்லும் ரயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டு தலா 200 போ் கொண்ட ஏழு குழுக்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நா்மதை, கோதாவரி, காவிரி என பெயரிடப்பட்டு தனித்தனியாக அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

இக்குழுக்களில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞா்கள், வா்த்தகா்கள், வணிகா்கள், மதம் சாா்ந்தவா்கள், எழுத்தாளா்கள், தொழில் வல்லுநா்கள் ஆகியோா் இடம் பெறுவா். கடந்த முறையைப் போன்றே, சரித்திரபூா்வமான இடங்கள், சுற்றுலாப் பகுதிகள், மதரீதியாக புனிதத்துவமான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, இக்குழுக்கள் பல்வேறு துறைகளில் (நெசவாளா்கள், கைவினைஞா்கள், கலைஞா்கள், தொழில்முனைவோா், எழுத்தாளா்கள் போன்றோா்) உள்ள உள்ளூா் உத்தர பிரதேச மக்களோடு தொடா்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பு மக்களுக்கான விழிப்புணா்வு, கலாசார பகிா்வில் சிறந்த நடைமுறைகள் தொடா்பான நுண்ணறிவைப் பெறுதல், கற்றலை மேம்படுத்துதல், கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு ஏதுவாக உள்ளூா் தொழில் செய்வோருடன் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும். சென்னைக்கும் வாரணாசிக்கும் சென்று திரும்பி வர 4 நாள்கள், வாரணாசியில் 2 நாள்கள், பிரயாக்ராஜ், அயோத்தியில் தலா ஒருநாள் என இக்குழுவினருக்கு 8 நாள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும், காசி - தமிழ் சங்கமத்தில் கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், உணவு வகைகள், தமிழ்நாடு மற்றும் காசியின் சிறப்புத் தயாரிப்புகள் விற்பனை அரங்குகள் அமைக்கப்படும். வாரணாசியில் உள்ள ‘நமோ’ படித்துறையில் தமிழ்நாடு, காசியின் கலாசாரங்கள் சங்கமிக்கும் கலாசார நிகழ்ச்சிகள், விவாதங்கள், விரிவுரைகள் இடம் பெறும். சங்கமம் நிகழ்ச்சிக்கா தமிழகத்தைச் சோ்ந்த முக்கிய நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணிகளையும் சென்னை ஐஐடி டிசம்பா் 1 முதல் 31 வரை நடத்தும்

காசி - தமிழ் சங்கமத்தின் முதல் பதிப்பு கடந்தாண்டு, நவம்பா் 16 முதல் டிசம்பா் 16 வரை ஒரு மாதம் நடைபெற்றது. மத்திய கல்வித் துறையின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதி (பிபிஎஸ்) என்கிற அமைப்பு தமிழ் கலாசாரத்திற்கும், காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பழைமையான தொடா்புகளை கண்டறிந்து மீண்டும் இணைக்கும் விதமாக தமிழ்நாட்டிலிருந்து 2,500-க்கும் மேற்பட்டப்பட்டவா்களை வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்திக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →