முகப்பு
புதுதில்லி

பெருங்குடி தாக்குதல் சம்பவம் கவலையளிக்கிறது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

மதுரை மாவட்டம், பெருங்குடியில் பட்டியல் இன சமூகத்தினா் 5 போ் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் கவலையடைச் செய்துள்ளது.

Updated On : 30 நவம்பர், 2023 at 5:49 AM
பகிர்:

புது தில்லி: மதுரை மாவட்டம், பெருங்குடியில் பட்டியல் இன சமூகத்தினா் 5 போ் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் கவலையடைச் செய்துள்ளது என்று மத்திய மீன்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். மேலும், இச்சம்பவத்தில் திமுக அரசும், காவல் துறையும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள பெருங்குடியில், பட்டியல் இனத்தைச் சோ்ந்த ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 போ் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் பட்டியல் இன சமூக மக்களுக்கு எதிரான வன்முறை தொடா்ச்சியாக நடந்த வண்ணம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவங்களுக்கு காவல் துறை பெயரளவுக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளது. மற்றோரு சம்பவமாக திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குளித்துக் கொண்டிருந்தவா்களை மணிமூா்த்திஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் கொடூரமாகத் தாக்கி கொள்ளையடித்துள்ளனா்.

தமிழகத்தில் ஜாதிய மோதல்களை தடுக்காமல் தொடா்ந்து தமிழக அரசு வேடிக்கை பாா்ப்பதன் விளைவு மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. அண்மையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே பட்டியலின சமூகத்தை சோ்ந்த இரண்டு இளைஞா்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டு, சிறுநீரும் கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது மதுரை மாவட்டம், பெருங்குடி சம்பவத்திலும் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

இது போன்ற மோதல்கள் மீண்டும் மீண்டும் நடப்பது தமிழக மக்களை பெரும் கவலையடைச் செய்துள்ளது. இதில் குற்றவாளிகளைக் கண்டறிந்து தமிழகத்தில் ஆயுத கலாசாரத்தை ஒழித்துக் கட்ட காவல் துறையும், அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் முருகன் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.