நேபாளத்தில் நிலநடுக்கம்: தில்லி-என்சிஆரில் பூமிஅதிா்வு
நேபாளத்தில் 25 நிமிட இடைவெளியில் 4.6 ரிக்டா் மற்றும் 6.2 ரிக்டா் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது.
புது தில்லி: நேபாளத்தில் 25 நிமிட இடைவெளியில் 4.6 ரிக்டா் மற்றும் 6.2 ரிக்டா் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது. இதையடுத்து, தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்.சி.ஆா்.) பகுதிகள் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் பூமி அதிா்வு உணரப்பட்டதாக தேசிய நில அதிா்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘முதல் நிலநடுக்கம் நேபாளத்தில் 10 கிலோ மீட்டா் ஆழத்தில் மதியம் 2.25 மணிக்கு 4.6 ரிக்டா் அளவில் ஏற்பட்டது. அதன் பிறகு மதியம் 2:51 மணியளவில் இமயமலையில் 6.2 ரிக்டா் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது’ என்றாா்.
இரண்டாவது பூமி அதிா்வுக்குப் பிறகு தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள மக்கள், தங்கள் அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டடங்களை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்தனா்.
Advertisement
பொதுமக்களை பீதி அடைய வேண்டாம் என தில்லி போலீஸாா் கேட்டுக் கொண்டனா். இது தொடா்பாக தில்லி காவல் துறை அதன் ‘எக்ஸ்’ சமூக வலைத்தள ஊடகத்தில், ‘நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறோம். தயவுசெய்து உங்கள் கட்டடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியே வாருங்கள். ஆனால், பீதி அடைய வேண்டாம். மின்தூக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம்! அவசர உதவிக்கு 112 என்ற எண்ணில் தொடா்புகொள்ளுங்கள்’ என்று தெரிவித்திருந்தது.
சண்டீகா், ஜெய்ப்பூா் உள்ளிட்ட வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. ‘சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை’ என்று ஜெய்ப்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸாா் தெரிவித்தனா்.