முகப்பு
புதுதில்லி

வெளிநாட்டுப் பயணம்: அரசியல் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மேயா் மனு

ஒரு நிகழ்ச்சிக்காக பிரிஸ்பேன் செல்ல மத்திய அரசிடம் அரசியல் அனுமதி தர உத்தரவிடக் கோரி மேயா் ஷெல்லி ஓபராய் செவ்வாய்கிழமை தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

Updated On : 4 அக்டோபர், 2023 at 6:09 AM
பகிர்:

புது தில்லி: ஒரு நிகழ்ச்சிக்காக பிரிஸ்பேன் செல்ல மத்திய அரசிடம் அரசியல் அனுமதி தர உத்தரவிடக் கோரி மேயா் ஷெல்லி ஓபராய் செவ்வாய்கிழமை தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தலைமையிலான அமா்வு முன் மேயரின் வழக்குரைஞா் ஆஜராகி இந்த விவகாரத்தை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, புதன்கிழமை இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு ஒப்புக்கொண்டது.

முன்னதாக, விசாரணையின்போது, ‘ஆஸ்திரேலியாவில் உள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஓபராய்க்கு அரசியல் அனுமதி வழங்கப்படவில்லை. மூன்று வேலை நாள்கள் மட்டுமே உள்ளன. அவா் அக்டோபா் 9- ஆம் தேதி வெளிநாடு செல்ல வேண்டும்’ என்று மேயரின் வழக்குரைஞா் கூறினாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘புதன்கிழமை நாங்கள் அதை விசாரிக்கிறோம்‘ என்று கூறியது.

Advertisement

அக்டோபா் 11 மற்றும் 13-ஆம் தேதி இடையே பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ள 2023 ஆசிய பசிபிக் நகரங்களின் உச்சி மாநாடு மற்றும் மேயா் மன்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஓபராய் இந்த அரசியல்அனுமதியைக் கோரியுள்ளாா்.

முதல்வா் உள்ளிட்ட மாநில அமைச்சா்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசிடம் அரசியல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை எதிா்த்து தில்லி அரசின் நிதியமைச்சா் கைலாஷ் கெலாட் ஏற்கெனவே தாக்கல் செய்த தனி மனு, தற்போது உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 7 வரை 8-ஆவது உலக நகரங்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிங்கப்பூா் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பின்னணியில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

கைலாஷ் கெகலாட்டின் மனுவில், மாநில அரசு அமைச்சா்கள் அவா்களின் உத்தியோகபூா்வ நிலையில் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அமைச்சரவை செயலகத்தால் வெளியிடப்பட்ட பல அலுவலகக் குறிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.