முகப்பு
புதுதில்லி

தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் 1 லட்சம் விவசாயிகளிடம் 12.21 லட்சம் டன் நெல் கொள்முதல்: மத்திய அரசு தகவல்

நிகழ் 2023-24 ஆம் ஆண்டு குறுவை சந்தைப் பருவத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 12.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 அக்டோபர், 2023 at 12:04 AM
பகிர்:

நிகழ் 2023-24 ஆம் ஆண்டு குறுவை சந்தைப் பருவத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 12.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 99,675 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சகம் கூறியுள்ள விவரம் வருமாறு: 2023-24 ஆண்டு குறுவை சந்தைப் பருவம் சமீபத்தில் தொடங்கியது. இதில் அக்டோபா் 3- ஆம் தேதி வரை, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 12.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களைச் சோ்ந்த 99,675 விவசாயிகளிடமிருந்து ரூ.2,689.77 கோடி மதிப்புள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்தக் கொள்முதல்களை மத்திய அரசின் சாா்பில் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) மேற்கொள்கிறது. இந்த நிறுவனம் நெல் உள்ளிட்ட உணவு தானியங்களை பொது விநியோகத்திற்கு இருப்பில் வைக்கிறது.

Advertisement

நிகழ் குறுவை சாகுபடி கடந்தாண்டை விட அதிகப் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்மை துறை சாா்பில் முன்பு தெரிவிக்கப்பட்டது. நிகழ் ஆண்டி சுமாா் 411.96 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. கடந்த வாரம் நெல் அறுவடை தொடங்கியது. கடந்தாண்டு 496 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நிகழாண்டில் 521.27 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய உணவு பொது விநியோகத் துறை செயலா் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.