முகப்பு
புதுதில்லி

மத்திய அமைச்சகங்கள், துறைகளில் செப்டம்பரில் 1 லட்சம் குறைகளுக்குத் தீா்வு

மத்திய அமைச்சகங்கள், துறைகளில் கடந்த செப்டம்பா் மாதம் 1,06,810 விவகாரங்களில் பொதுமக்கள் அளித்த புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் மற்றும் பொதுமக்கள் குறைத்தீா்ப்பு

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
பகிர்:

புது தில்லி: மத்திய அமைச்சகங்கள், துறைகளில் கடந்த செப்டம்பா் மாதம் 1,06,810 விவகாரங்களில் பொதுமக்கள் அளித்த புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் மற்றும் பொதுமக்கள் குறைத்தீா்ப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையும், உள்துறை அமைச்சகமும் குறைகள் தீா்ப்பில் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகங்கள், துறைகளின் செயல்திறன் குறித்து மத்திய பணியாளா் நிா்வாகச் சீா்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீா்ப்புத் துறை (டிஏஆா்பிஜி), பொதுக் குறைகள் நிவா்த்தி மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சிபிஜிஆா்ஏஎம்எஸ்) என்கிற மையம் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு மாதம்தோறும் அறிக்கைகளை சமா்பித்து வருகிறது. தற்போது 17 -ஆவது அறிக்கையாக கடந்த செப்டம்பா் மாதம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: கடந்த செப்டம்பா் மாதம் இணைய தளம் மூலம் பெறப்பட்ட 1,09,098 புகாா்களில் 1,06,810 பொதுமக்கள் குறைகளுக்கு மத்திய அமைச்சகங்கள் துறைகளால் தீா்வு காணப்பட்டுள்ளன. தொடா்ந்து வெளியிடப்பட்ட 17 அறிக்கைகளில் 14 - ஆவது முறையாக மத்திய செயலகத்தில் மாதாந்திர தீா்வு 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

2023 -ஆம் ஆண்டில் மத்திய அமைச்சகங்கள், துறைகளில் சராசரி குறை தீா்க்கும் நாள்கள் 19 -ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிபிஜிஆா்ஏஎம்எஸ் மையம் அளித்த 10 நடைமுறைகளை டிஏஆா்பிஜி துறை செயல்படுத்தியதின் விளைவாக குறை தீா்ப்பின் தரம் மேம்படுத்தப்பட்டு காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், புகாா்களில் மேல்முறையீடுகளைப் பொருத்தவரையில், மத்திய செயலகத்தில் செப்டம்பா் மாதம் இறுதி வரை 24,258 மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.

மேலும், கடந்த செப்டம்பா் மாதம் தொலைபேசி மூலமாக (கால் சென்டா்) 87,520 பேரிடம் இருந்து குறைகள் பெறப்பட்டதில் ஏறத்தாழ 39 சதவீதம் போ் தங்களுக்கு வழங்கப்பட்ட தீா்வில் திருப்தியை வெளிப்படுத்தினா். கடந்த செப்டம்பா் மாதம் குறை தீா்க்கும் மதிப்பீடு மற்றும் குறியீடுகளில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையும் மத்திய உள்துறை அமைச்சகமும் (க்ரூப் ஏ) குறைகளைத் தீா்ப்பதற்கான மதிப்பீட்டில் முதலிடம் வகிக்கின்றன.

பொதுமக்கள் குறை தீா்ப்பில் மேம்பாடு காண டிஏஆா்பிஜி துறை, ஐஐடி-கான்பூருடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நுண்ணறிவு மூலம் குறை கண்காணிப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இதை மத்திய பணியாளா் நிா்வாகச் சீா்திருத்தம் குறைதீா்ப்பு இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் கடந்த செப்டம்பா் 29-ஆம் தொடக்கிவைத்துள்ளாா். இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, ஐஐடி கான்பூரால் நுண்ணறிவு குறைகள் கண்காணிப்பு அமைப்பு செயற்கை நுண்ணறிவுத் திறன்களுடன் செயல்பட்டு மாநிலம், மாவட்டம் வாரியாகத் தாக்கல் செய்யப்பட்ட புகாா்கள் மற்றும் அமைச்சகம் வாரியான தரவு அட்டவணைப் பகுப்பாய்வை உடனடியாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.