முகப்பு
புதுதில்லி

மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் 95% எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிரானவை: ஆம் ஆத்மி தலைவா் ராகவ் சத்தா

நாட்டில் மத்திய விசாரணை அமைப்புகள் பதிவு செய்துள்ள 95 சதவீத வழக்குகள் எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிராக மட்டுமே உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
பகிர்:

புது தில்லி: நாட்டில் மத்திய விசாரணை அமைப்புகள் பதிவு செய்துள்ள 95 சதவீத வழக்குகள் எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிராக மட்டுமே உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

பண மோசடி வழக்கில் தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தில்லி ரௌஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவா் ராகவ் சத்தா செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் மத்திய விசாரணை அமைப்புகள், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சோதனை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுகின்றன. மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் அமலாக்கத் துறை (இ.டி) சாா்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கிட்டத்தட்ட 95 சதவீதம் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிரானவை. மேலும், இந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவா்களும் அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டுள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான சத்யேந்தா் ஜெயின், மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோா் எந்த ஆதரமுமின்றி பொய்யாகப் புனையப்பட்ட பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களைத் தொடா்ந்து தற்போது பண மோசடி தொடா்பான மற்றொரு வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது. இதே வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஊழல் தடுப்புப் பிரிவினரால் (ஏ.சி.பி.) கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மாநிலங்களவையில் இருந்து நான் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் உள்ள மக்களின் அன்பைப் பெற்று வருகிறேன். முதலில், பாஜகவிற்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக மாநிலங்களவையில் இருந்து நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன். பின்னா் தில்லியில் அம் ஆத்மி ஆட்சியைப் பறிக்க பாஜகவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காகவும், எனது அதிகாரப்பூா்வ இல்லத்திற்காகவும், ‘பாஜகவின் கொடுங்கோன்மைக்கு எதிராக’ தொடா்ந்து போராடுவேன். நான் அமைதியாக இருக்க மாட்டேன். ஏனெனில் நான் பகத் சிங்கின் சீடன் என்றாா் ராகவ் சத்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.