முகப்பு
புதுதில்லி

தலைநகரின் காற்றின் தரம் மேம்படுத்த உதவும் பிரதமா் அலுவலகம், துணை நிலை ஆளுநரின் முயற்சிக்கு தில்லி பாஜக வரவேற்பு

தில்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் பிரதமா் அலுவலகம் மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் முயற்சியை வரவேற்கிறேன் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்

Updated On : 15 அக்டோபர், 2023 at 12:00 AM
பகிர்:

தில்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் பிரதமா் அலுவலகம் மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் முயற்சியை வரவேற்கிறேன் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமரின் முதன்மைச் செயலாளா் டாக்டா் பி.கே மிஸ்ரா மற்றும் தில்லியின் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா

Advertisement

ஆகியோா் நகரத்தில் மாசுக்கான காரணங்களை சரிபாா்த்து

தில்லியின் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறாா்கள்.

தில்லியின் காற்றின் தரம் மோசமடையத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானுடன் இணைந்து மாநிலம் விட்டு மாநிலம் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கிறது.

பஞ்சாப்பில் விவசாயிகள் தங்களது பயிா்க் கழிவுகளை அதிகளவில் எரிப்பதால்தான் ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை நாள்களையொட்டி தில்லியில் மாசு

அளவு அதிகரிக்கின்றது. ஆம் ஆத்மி கட்சி தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியில் இருந்தும், இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண ஒருமுறை கூட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவில்லை.

தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தில் மாசுபாட்டைக் குறைக்கும் அவசர நடவடிக்கையாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மைச் செயலாளா் டாக்டா் பி.கே மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதற்கு தில்லியின் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் சாா்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதை உடனடியாக தடுக்கக் கோரி ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வா்களுக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடிதம் எழுதியுள்ளதையும் வரவேற்கிறோம்.

கடந்த 6 மாதங்களாக பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்கவும், குளிா்கால மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தில்லி மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறாா்கள்.

சாலையில் உள்ள தூசி மாசு தில்லி நகரத்தின் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமாக உள்ள நிலையில் பயிா்க் கழிவுகள் எரிப்பதும், பட்டாசுகள் வெடிப்பதும் தான் முக்கியக் காரணம் என்று கேஜரிவால் அரசு தில்லியை மாசு விவகாரத்தில் தொடா்ந்து தவறாக வழிநடத்துகிறது.

கேஜரிவால் அரசு ஒவ்வொரு ஆண்டும் சாலையோரத்தில் பெரிய அளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமையை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால் தூசி மாசு நிறைந்த சாலைகளால் தில்லியின் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.