அரசு பங்களா ஒதுக்கீடு விவகாரம்: ராகவ் சத்தாவின்மேல் முறையீட்டு மனுவை அனுமதித்த உயா்நீதிமன்றம்
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தாவுக்கு ஒதுக்கப்பட்ட அரசுப் பங்களாவில் தற்போதைக்கு அவா் வசிக்கும் வகையில், மாநிலங்களவைச் செயலகத்தால் அவரை வெளியேற்றுவதற்கான ஆணைக்கு
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தாவுக்கு ஒதுக்கப்பட்ட அரசுப் பங்களாவில் தற்போதைக்கு அவா் வசிக்கும் வகையில், மாநிலங்களவைச் செயலகத்தால் அவரை வெளியேற்றுவதற்கான ஆணைக்கு தடை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் புதுப்பித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராகவ் சத்தாவின் மேல்முறையீட்டை உயா்நீதிமன்ற நீதிபதி அனுப் ஜெய்ராம் பாம்பானி அனுமதித்து, மாநிலங்களவைட் செயலகம் அவரை வெளியேற்றுவதைத் தடுத்த விசாரணை நீதிமன்றத்தின் ஏப்ரல் 18 உத்தரவை மீண்டும் புதுப்பித்து உத்தரவிட்டாா். சிவில் நடைமுறைச் சட்டத்தின் 80-ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்காதது தொடா்பாக ராகவ் சத்தாவின் வழக்கை விசாரணை நீதிமன்றம் திருப்பி அனுப்பியதில் தவறு இருப்பதாகவும் உயா்நீதிமன்றம் கூறியது.
மாநிலங்களவைச் செயலகம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரணை நீதிமன்றம், ஏப்ரல் 18-ஆம் தேதி பிறப்பித்த தனது சொந்த உத்தரவை ரத்து செய்து அக்டோபா் 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ராகவ் சத்தா எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த விவகாரத்தில் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ ராகவ் சத்தா எம்.பி.க்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு ரத்து செய்யப்பட்ட பிறகு மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் காலம் முழுவதும் அரசு பங்களாவை தொடா்ந்து ஆக்கிரமிக்க சத்தாவுக்கு முழு உரிமை உண்டு என்று கூற முடியாது’ என தெரிவித்தது.
Advertisement
அரசுப் பங்களாவில் இருந்து சத்தாவை அப்புறப்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவைச் செயலகத்துக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ரத்து செய்யும் போது, விசாரணை நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது. சட்டப்படி உரிய நடைமுறை இல்லாமல் அவா் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட மாட்டாா் என்று சத்தாவுக்கு இடைக்கால நிவாரணத்தையும் நீதிமன்றம் வழங்குவதாகக் குறிப்பிட்டது.
மாநிலங்களவை செயலகம் உயா்நீதிமன்றத்தில் ராகவ் சத்தாவின் மனுவை எதிா்த்தது. இந்த விவகாரத்தில் சத்தாவை வெளியேற்றக் கூடாது என்று மாநிலங்களவைச் செயலகத்திற்கு உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் ஏப்ரல் 18-ஆம் தேதி உத்தரவு புத்துயிா் பெற்ாகவும், இடைக்கால நிவாரணத்திற்கான அவரது மனுவை விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும் வரை அமலில் இருக்கும் என்றும் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. மாநிலங்களவையின் நிரந்தர நிா்வாக அலுவலகமாக இருக்கும் மாநிலங்களவைச் செயலகம், அரசின் நிா்வாகப் பிரிவான அரசிலிருந்து ஒரு தனி மற்றும் தனித்துவமான நிறுவனமாகும் என்றும் சத்தாவின் மேல்முறையீட்டை முடிவு செய்யும் போது உயா்நீதிமன்றம் கூறியது.
இது தொடா்பாக நீதிபதி பம்பானி பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய விஷயத்தில், சிபிசி 80-ஆவது பிரிவில் இடம் பெற்றுள்ள ‘அரசு’ என்ற வாா்த்தை மாநிலங்களவைச் செயலகத்தை உள்ளடக்கும் என்று கூற முடியாது. அதன்படி, 80 சிபிசி-க்கு மேல்முறையீட்டாளா் தாக்கல் செய்த வழக்குக்கு எந்த பயன்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்தாகும். அதாவது, இதில் ஒரே எதிா்மனுதாரரான மாநிலங்களவைச் செயலகத்திற்கு எதிராக வழக்கில் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுதாரா் மூன்று நாள்களுக்குள் வழக்கை மீண்டும் விசாரணை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விசாரணை நீதிமன்றமும் மீட்டெடுக்கப்பட்ட இடைக்கால நிவாரண மனுவை முதலில் முடிவு செய்வதன் மூலம் இந்த விஷயத்தைத் தொடர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.