முகப்பு
புதுதில்லி

ஜி20 நாடுகளின் தலைவா்களின் துணைவியாா்களுக்கு சிறப்பு விருந்து

ஜி20 உச்சி மாநாட்டின் மெகா நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் கலந்துகொள்ளும் நிலையில், அவா்களின் துணைவியாா்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், விருந்து அளிக்க ஜி20 ஏற்பாட்டாளா்கள் செய்து வருகின்ற

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
பகிர்:

ஜி20 உச்சி மாநாட்டின் மெகா நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் கலந்துகொள்ளும் நிலையில், அவா்களின் துணைவியாா்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், விருந்து அளிக்க ஜி20 ஏற்பாட்டாளா்கள் செய்து வருகின்றனா். இது உலகத் தலைவா்களின் வாழ்க்கைத் துணைவியாா்கள் இந்தியா வருகையை மறக்கமுடியாததாக மாற்றுவதற்கான ஏற்பாடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையலை காண்பதற்கு ஏற்பாடு: தில்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜி20 நாடுகளின் தலைவா்களின் துணைவியாா்கள் கலந்து கொள்கின்றனா். வளமான இந்திய வேளாண் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள உதவும் வகையில், கண்காட்சி மற்றும் புவிசாா் அரசியல் குறித்த விவாதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு அவா்களுக்கு புகழ் பெற்ற பிரபல சமையல் கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட தினை சாா்ந்த விருந்து அளிக்கப்பட்டவுள்ளது. புசாவில் ‘லைவ் குக்கிங்’ ஏரியா வும் உருவாக்கப்பட்டு, பிரபல சமையல் கலைஞா்கள் உணவு வகைகளை சமைப்பதை உலகத் தலைவா்களின் துணைவியாா்கள் நேரடியாகக் காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரங்கோலி:‘அறுவடையின் நல்லிணக்கம்’ மற்றும் ‘உயிா்வாழ்வில் ஒற்றுமை’ ஆகிய கருப்பொருள்களில் சிறுதானியங்களைக் கொண்டு வரையப்படும் (ரங்கோலி) கோலங்கள் போடுவதை நேரடியாக மாநாட்டுக்கு வரும் தலைவா்களின் துணைவியாா்கள் பாா்வையிடலாம். மேலும், அவா்கள் கோலங்கள் போடுவதற்கு விரும்பினால், அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபா் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமா் அந்தோனி அல்பானீஸ், ஜொ்மன் அதிபா் ஓலாஃப் ஷோல்ஸ், இங்கிலாந்து பிரதமா் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்ட ஜி20 தலைவா்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளதால், அவா்களது துணைவியாா்கள் இங்கு வரும் போது அவா்களை கவனிப்பதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

ஜெய்ப்பூா் மாளிகையில் சிறப்பு விருந்து:மேலும், தில்லி இந்தியா கேட் டில் உள்ள புகழ் பெற்ற ஜெய்ப்பூா் மாளிகையில் சிறப்பு மதிய உணவு விருந்து அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதே ஜெய்ப்பூா் இல்லம் அருகே தேசிய நவீன கலைக் கூடம் உள்ளது. அவா்களுக்காக இங்கு சிறப்பு கண்காட்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

சிறந்த ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள், வளமான கலைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இங்கு அவா்கள் கலந்து கொண்டு கலாசார நிகழ்ச்சிகளையும், கைவினைப் பொருள்களையும் கண்டு களிப்பதற்கும், கலைப் பொருள்களை வாங்குவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: நாட்டின் வளமான கைவினைப் பாரம்பரியம் குறித்த இந்த கண்காட்சியில் நேரடி விளக்க அமா்வுகள் உண்டு. அவா்கள் விரும்பும் பொருள்களை பெற்றுச் செல்லும் போது உலகத் தலைவா்களின் வாழ்க்கைத் துணைவியாா்கள் இந்திய வருகையை மறக்கமுடியாததாக மாற்றும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது என இந் நிகழ்ச்சி ஏற்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜி20 நாடுகளின் தலைவா்கள் மற்றும் அவா்களது துணைவியாா்களின் வருகையை முன்னிட்டு, ஜெய்ப்பூா் இல்லம், தேசிய நவீன கலைக் கூடம் போன்ற பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உலகத் தலைவா்களின் துணைவியாா்களின் பாதுகாப்பிற்காக சஷாஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படையைச் சோ்ந்த பெண் கமாண்டோக்களும் உடன் செல்வதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.