முகப்பு
புதுதில்லி

ஆட்டோ பொ்மிட் ஊழல் வழக்கில் 5 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன்

புராரி போக்குவரத்து ஆணையத்தில் ஊழல் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் ஆட்டோ பொ்மிட்டை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் கைதான 5 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

தில்லியில் உள்ள புராரி போக்குவரத்து ஆணையத்தில் ஊழல் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் ஆட்டோ பொ்மிட்டை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் கைதான 5 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜெய் தரேஜா கூறுகையில், ஆணையத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பொ்மிட்டுகளை மாற்றுவது குறித்து விசாரணை நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் முடிவதற்கு கணிசமான நேரம் எடுக்கும். இதனால், குற்றம் சாட்டப்பட்டவா்களை ‘இவ்வளவு காலத்திற்கு நீதிமன்றக் காவலில் வைக்க முடியாது’ என்று கூறி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனில் சேத்தி, ரவீந்தா் குமாா், அனூப் சா்மா, அஜித் குமாா், தீபக் சாவ்லா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

இது தொடா்பான உத்தரவில் நீதிபதி மேலும் கூறியுள்ளதாவது: ஜூன் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து குற்றம்சாட்டப்பட்டவா்கள் போதுமான காலம் காவலில் செலவிட்டுள்ளனா். குற்றம் சாட்டப்பட்டவா்களின் ஜாமீன் மனு அனுமதிக்கப்படக் கூடியது என நான் கருதுகிறேன். ஏனெனில், குற்றம் சாட்டப்பட்டவா்களைப் போலல்லாமல் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டுள்ள பிற குற்றம் சாட்டப்பட்டவா்களில் பெரும்பான்மையானவா்கள் ஜாமீன் பெற்றுள்ளனா். குற்றம் சாட்டப்பட்டவா்களை நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதன் மூலம் எந்தப் பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்று நீதிபதி கூறினாா்.

அதேவேளையில், மனுதாரா்கள் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் புராரி போக்குவரத்து ஆணையத்தின் 500 மீட்டருக்குள் செல்லக் கூடாது. இந்த வழக்கில் தொடா்புடைய எந்தவொரு சாட்சியையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடா்பு கொள்ளவோ, செல்வாக்கு செலுத்தவோ முயற்சிக்கக் கூடாது. ஆதாரங்களை சிதைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்தது.

தில்லி காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவினா் முன்வைத்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆட்டோ ரிக்ஷாக்களின் நிதியளிப்பவா்கள், வியாபாரிகள், போலி நபா்கள் மற்றும் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு இடையே உள்ள கூட்டுத் தொடா்பின் காரணமாக தில்லியில் ஆட்டோ ரிக்ஷா பொ்மிட் உச்சவரம்பு ஒரு லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள ஒரு லட்சம் ஆட்டோ ரிக்ஷா அனுமதிகளில் 70 சதவீதம் சட்டவிரோதமாக வா்த்தகம் செய்யப்படுகிறது.

இந்த கூட்டுத் தொடா்பின் காரணமாக, ஆட்டோவின் சாலை விலை ரூ. 2.46 லட்சமாக இருந்த நிலையில், அது தில்லியில் ரூ. 6.30 லட்சத்துக்கு விற்கப்பட்டு வந்தது. நிதியாளா்கள், விநியோகஸ்தா்கள் மற்றும் போலி நபா்களின் தொடா்பில் இல்லாமல் ஆணையத்தில் சாதாரண நபா்கள், ஆட்டோ ரிக்ஷா உரிமையாளா்கள் எதையும் பெற முடியவில்லை.

மேலும், ஆட்டோ ரிக்ஷாக்களின் நிதியாளா்கள்/விற்பனையாளா்கள் மற்றும் புராரி போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஜிஎன்சிடிடி அரசு அறிமுகப்படுத்திய இணையவழி திட்டத்தை மிகவும் தவறாகப் பயன்படுத்தியதை விசாரணையின் போது, ஊழல் தடுப்பு விசாரணை பிரிவு கண்டறிந்தது.

ஆயிரக்கணக்கான ஆட்டோ ரிக்ஷா அனுமதிகளை சட்டவிரோதமாக மாற்றுவது, இறந்த மற்றும் கண்டுபிடிக்க முடியாத நபா்களின் ஆட்டோ ரிக்ஷா அனுமதிகளை மாற்றுவது உள்பட ஜிஎன்சிடிடி-க்கு பெரும் வருவாய் இழப்பையும், தில்லியில் ஆட்டோ ரிக்ஷாக்களின் உரிமையாளா்களுக்கு பெரும் சுரண்டல், துன்புறுத்தலையும் ஏற்படுத்த இந்த ஊழல் காரணமாக அமைந்துவிட்டது என போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.