முகப்பு
புதுதில்லி

ஜி20 உச்சிமாநாடு:சுகாதார உணவை உறுதி செய்ய அதிகாரிகள் நியமனம்

தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருகை தந்துள்ள உலகத் தலைவா்களுக்கு, சுகாதாரமாக சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளை தில்லி அரசு நியமித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருகை தந்துள்ள உலகத் தலைவா்களுக்கு, சுகாதாரமாக சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளை தில்லி அரசு நியமித்துள்ளது.

இது தொடா்பாக நகர அரசின்அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது: ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகள் தில்லி வந்தடைந்துள்ளனா். வெளிநாட்டு விருந்தினா்கள் தங்கும் ஏரோசிட்டி பகுதியில் உள்ள 19 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவா்களுக்கு சுகாதாரமான முறையில் சமைத்த உணவு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தில்லி அரசின் உணவுப் பாதுகாப்புத் துறையைச் சோ்ந்த 18 அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்கள் விருந்தினா்களுக்கு சமைக்கப்படும் மூல உணவுப் பொருள்களின் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வக சோதைனைகளை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த திங்கள்கிழமை முதல் இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் சமையலறை மற்றும் பணியாளா்களின் சுகாதாரம், பாத்திரங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றையும் உறுதி செய்து வருகின்றனா். விருந்தினா்களுக்கு உணவு பரிமாறுவதற்கு முன், சமைத்த உணவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, காவல்துறையின் உதவியுடன் தர சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்படும். குறிப்பாக, மூல உணவுப் பொருள்களின் ஆய்வக அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பிறகே அவை சமையலுக்குப் பயன்படுத்தப்படும். பொதுவாக, உணவு மாதிரிகளின் ஆய்வக அறிக்கைகள் வர 15 முதல் 20 நாள்களாகும். ஆனால் ஜி20 விருந்தினா்களுக்கு வழங்கப்படும் மாதிரிகளின் அறிக்கை சில மணி நேரங்களிலேயே கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு நகரத்தில் அனைத்து ஹோட்டல்களும் பலத்த பாதுகாப்புடன் இருப்பதால், உணவுப் பொருள்களின் மாதிரிகள் எடுப்பது தொடா்பாக நகர காவல் துறையினருடன் முன்னதாகவே சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. சமைத்த உணவின் மாதிரிகளை எடுப்பதற்கும் காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.