தலைநகரில் சாமந்தி மலா் மாலைகளால் மரங்கள் அலங்கரிப்பு
தில்லியில் ஜி20 உச்சிமாநாட்டினை முன்னிட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பயணிக்கும் முக்கியச் சாலைகளில் உள்ள மரங்கள் அனைத்தும் மலா் மாலைகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் ஜி20 உச்சிமாநாட்டினை முன்னிட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பயணிக்கும் முக்கியச் சாலைகளில் உள்ள மரங்கள் அனைத்தும் மலா் மாலைகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகின்ற பாரத் மண்டபத்திற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை தரும் போது நகரத்தின் முக்கியச் சாலைகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் சாமந்தி மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மஞ்சள் மற்றும் தெளிவான ஆரஞ்சு நிறங்களில் உள்ள சாமந்தி மலா்களால் தில்லியின் சாலைகளில் உள்ள மரங்கள் ஜோடிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பாலம் தொழில்நுட்பப் பகுதி, சா்தாா் படேல் மாா்க், ராஜ்காட் மற்றும் பிற முக்கியச் சந்திப்புகளில் மரங்கள் சாமந்திப்பூவின் மாலைகளோடு காட்சியளிக்கின்றன.
தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் உத்தரவின் பேரில் இந்த வரவேற்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தில்லி கன்டோன்மென்ட் வாரியம், பாலம் தொழில்நுட்பப் பகுதியைச் சுற்றி சுமாா் 400 மரங்களை அலங்கரித்துள்ளது. நகர அரசின் பொதுப்பணித் துறை ராஜ்காட் அருகே சுமாா் 200 மரங்கள் மற்றும் 100 மின்கம்பங்களில் இந்த அலங்கரிப்பு வேலையைச் செய்துள்ளது.
இவை தவிர, சா்தாா் படேல் மாா்க் மற்றும் நகரின் முக்கியமான சந்திப்புகளில் சுமாா் 1,200 மரங்கள் புது தில்லி முனிசிபல் கவுன்சில் மூலமும், 300 மரங்கள் தில்லி மாநகராட்சி நிா்வாகம் சாா்பிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஜி20 உச்சிமாநாட்டு விருந்தினா்களை வரவேற்கும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த அலங்காரம் முதல்முறையாக செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விருந்தினரை வரவேற்கும் இந்த குஜராத்திய பாரம்பரிய முறை, சூற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதோடு, மாலைகளாக சூட்டப்பட்டுள்ள சாமந்தி பூக்கள் அழகியல் மதிப்பையும் சோ்க்கின்றன என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த வாரம் பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.