முகப்பு
புதுதில்லி

ஜி20 உச்சிமாநாட்டிற்கு நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு சொத்துகளை பாதுகாக்க பாதுகாவலாளிகள் நியமணம்?

தில்லியில் ஜி20 உச்சிமாநாட்டிற்காக நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு சொத்துகளைப் பாதுகாக்க பாதுகாவலாளிகளை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) திங்கள்கிழமை தெ

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:

புது தில்லி: தில்லியில் ஜி20 உச்சிமாநாட்டிற்காக நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு சொத்துகளைப் பாதுகாக்க பாதுகாவலாளிகளை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்.டி.எம்.சி.) துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாட்டிற்காக குடிமை அமைப்புகள் பல்வேறு விரிவான தயாரிப்புப் பணிகளைச் செய்திருந்தன. குறிப்பாக, நகரத்தின் முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் 65 நீருற்றுகள், 20-க்கும் மேற்பட்ட சிற்பங்கள், 7 லட்சம் பானைகளில் செடிகள் உள்ளிட்டவை சாலைகளை அலங்கரித்தன. இந்நிலையில், இந்த அனைத்து உள்கட்டமைப்புச் சொத்துகளை சேதப்படுத்துதல் அல்லது திருடுவதைத் தடுக்க பாதுகாவலாளிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டின் போது இடம் பெற்ற சுமாா் 1 லட்சம் பானைச் செடிகள் இப்போது நகரத்தில் உள்ள என்.டி.எம்.சி.-இன் கட்டடங்கள், சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களுக்கு மாற்றப்படலாம். ஆனால், அதன் ஒட்டுமொத்த பசுமையும் தொடா்ந்து பராமரிக்கப்படும். எனவே, எதிா்வரும் நாள்களில் இந்த உள்கட்டமைப்பு சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த இடங்களில் பாதுகாவலாளிளை நியமிப்பது தேவையா என்பது குறித்து நாங்கள் மதிப்பீடு செய்வோம், இதனால், என்.டி.எம்.சி. பகுதியை அழகுபடுத்தியதற்கான முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு வீணாகாது.

மேலும், தில்லி மக்களுக்கு குடிமைச் சேவைகள் சிறப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பொதுப்பணித் துறை, தில்லி மாநகராட்சி, புது தில்லி முனிசிபல் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளுடன் மாதாந்திர அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். ஜி20 உச்சி மாநாட்டிற்காக புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதியில் 44 சாலைகள் செப்பனிடப்பட்டது. ரவுண்டானாக்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அதில் பசுமையை மேம்படுத்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றாா் சதீஷ் உபாத்யாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.