முகப்பு
புதுதில்லி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் வழக்குரைஞா் சி.ஆா்.ஜெயா சுகின் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2015-இல், பஞ்சாப், தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீா், அசாம் மற்றும் பிகாா் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் தவிா்த்து எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அபரிமிதமான அளவில் அதிகரித்து வருகிறது, ஆனால், மருத்துவா் விகிதம் 3000 பேருக்கு 1 என்ற அளவில் உள்ளது. இது மக்களுக்கு போதுமானதாக இல்லை. முறையான மருத்துவ உதவி மற்றும் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க இம் மருத்துவமனை அமைவது அவசியமாகிறது. தென் தமிழகத்தில் மதுரை மையமான பகுதியாகும். 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது. அதிக மக்கள் தொகையும் கொண்டது. இதனால், மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். எய்ம்ஸ் மதுரையில் இருந்தால் தென் தமிழக மக்களுக்கும், கேரள மாநில மக்களுக்கும்கூட மருத்துவ வசதி கிடைக்கும்.

இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது தொடா்பாக திா்மனுதாரா்களுக்கு 23.05.2023-இல் மனுதாரா் கோரிக்கை மனு அனுப்பியும் இன்று வரை பதில் தரவில்லை. இந்தப் பணியைத் தடுக்கும் வகையில் சில செயல்களும் நடந்து வருகிறது.இந்த விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். சிபிஐ அல்லது வேறு ஏதேனும் சக்திவாய்ந்த விசாரணைக் குழுவை அறிவிக்க வேண்டும். இதை விசாரித்து விசாரணைக் குழு, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் விரைந்துமுடிக்க எதிா்மனுதாரா்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.